Wednesday, March 18, 2015

அறிவு!                           அறம்!                                        அன்பு!                                  அமைதி!


மார்கண்டேய கட்ஜு விமர்சனம்!
மாநிலங்களவையில் கண்டனம்!!
மகாத்மா காந்தி தேசத் தந்தையா?!



'தேசத் தந்தை' மகாத்மா காந்தியை 'பிரிட்டிஷ் ஏஜென்ட்' என்றும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை ஜப்பானியர் கைக்கூலி எனவும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது 'வலைப் பூவில்' எழுதியுள்ளதாகவும், 11.03.2015 புதனன்று மாநிலங்களவையில் 'பூஜ்யம்' நேரத்தில் எதிர்கட்சியினர் மற்றும் ஆளுங்கட்சியினர் இணைந்து கட்ஜுவின் கருத்துக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து ஒருமித்தக் கருத்தோடு நிறைவேற்றியதாகவும், 12.03.2015 வியாழக்கிழமை 'தி இந்து' நாளிதழில் செய்தி வந்துள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள எழுத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது கருத்துகளை தனது வலைப்பூவில் பதிவு செய்துள்ளார். இதற்கு இந்திய மாநிலங்களவையில் அரசியல்வாதிகள் ஒருங்கிணைந்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள்!

கட்ஜு கருத்து சரியா தவறா? கண்டனத் தீர்மானம் சரியா தவறா? என்னும் சர்ச்சைக்குள் நான் நுழைய விரும்பவில்லை. காந்தி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா? கடவுளையே விமர்சிக்கும் இந்திய நாட்டில் காந்தியை விமர்சிப்பது கருத்துரிமையை மீறிய செயலாகுமா? இதற்கு முன்னர் வேறு எவரும் காந்தியை விமர்சனம் செய்ததே இல்லையா? இதை இந்திய மக்கள் அறிந்து தெளிந்திடவே பொதுநல நோக்கோடு என் கருத்துகளை இந்திய மூத்தக் குடிமகன் என்னும் உரிமையில் பதிவு செய்கிறேன்.

அமெரிக்க வாழ் இந்தியர் டாக்டர் வேலு அண்ணாமலை Ph.D. (USA) அவர்கள் தொகுத்த 'சார்ஜன்ட் மேஜர் எம்.கே. காந்தி என்னும் நூலினை 1995 டிசம்பர் 21ல், 'அம்பேத்கர் அறிவுலகம்' சார்பாக தமிழ்மறையான் அச்சிட்டு வெளியிட்டுள்ள நூலிலிருந்து சில பகுதிகள் இங்கு பதிவு செய்யப்படுகிறது.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி வாழ்ந்த காலத்திலேயே அவரை விமர்சனம் செய்தவர்கள் ஏராளம். அதனில் ஒருசிலவற்றை இவண் எடுத்தியம்புகின்றேன்.

காந்தியின் அரசியல் குருவாகக் கருதப்பட்ட கோகலே கூறுகிறார்:- "காந்தியே, இன்றைக்கு நாட்டை நாசப்படுத்தக்கூடியதாக அச்சுறுத்துபவை உம்முடைய அரைவேக்காட்டுத் தனமான கருத்துகளே! அவற்றை உதிர்ப்பதிலிருந்து நீர் ஒதுங்கிக் கொண்டால் அழிவிலிருந்து நாட்டைக் காப்பாற்றி விடலாம்; நீர் எப்பொழுதுமே உமது சொந்த வழியிலேயேதான் நடப்பீர், மற்றவர் கருத்தை மதிக்கவே மாட்டீர் ".

செசில் பிரபு காந்தியைப் பற்றி இவ்வாறு கூறினார்:- "உலகம், இதுவரை கண்டிராத அமைதியின் மிகப்பெரிய எதிரி காந்தியே! காந்தியின் அமைதி வழி அகிம்சைப் போராட்டம் என்பது கலவரங்களுக்கு மட்டுமே இட்டுச் செல்லும்; வன்முறை வெறித்தனத்துக்கே அதனால் இறுதி வெற்றி கிட்டும்".

அறிஞர் எம்.என். ராய்:- "பிற்படுத்தப்பட்ட இந்தியப் பொதுமக்களின் அறியாமை, குருட்டு நம்பிக்கை, தலைவர் வழிபாடு ஆகியவற்றால் உருவாக்கப்பட்டதே காந்தியம். மடமை, கோழைத்தனம், தோல்வி மனப்பான்மை, பிற்போக்குநிலை ஆகியவற்றின் மிக மிக கீழ்த்தரமான வெளிப்பாடே காந்தியம் என்பது!"

கவிஞர் இரவீந்ரநாத் தாகூர்:- நீங்கள் உண்மையிலேயே 'மகாத்மா' என்றால் - தெய்வீக சக்தி உடையவர் என்றால் - நீங்கள் ஏன் ஓர் அற்புத நிகழ்ச்சியை நடத்தி இந்தியாவைக் காப்பாற்றக் கூடாது?"

பண்டித ஜவகர்லால் நேரு தம்முடைய தன் வரலாறு (Auto biography) நூலில் காந்தியைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "அரசியல் சிக்கல் ஒன்றுக்கு காந்தியின் மதவாத உணர்ச்சிவயப்பட்ட அணுகுமுறையைக் கண்டு அவரிடம் நான் ஆத்திரமே அடைந்தேன். இது தொடர்பாகக் கடவுளை அவர் அடிக்கடி ஆதாரக் குறிப்புகள் காட்ட துணைக்கு அழைத்ததும் எனக்குச் சினத்தையே கொடுத்தது".

வட்ட மேசை மாநாடுகளுக்குப் பின்னர் அண்ணல் அம்பேத்கரின் கோரிக்கைகளை ஏற்று பிரிட்டிஷ் அரசு தீண்டப்படாத மக்களுக்கு இரட்டை வாக்குரிமை வழங்கியபோது அதை எதிர்த்து பூனா எரவாடா சிறையில் காந்தி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினார். இதைக்கண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: "தீண்டப்படாத சமூகத்தின் மீது ஆங்கிலேயர் அரசே அக்கறைக் கொண்டு 'தனித் தேர்தல் தொகுதி திட்டம்' கொண்டுவரும் போது அதனைத் தடுப்பதற்காகச் சாகும் வரை உண்ணா நோன்பு மேற்கொள்வது என்ன நீதி" என்று காந்தியைக் கடுமையாகவே கண்டித்தார் போஸ்.

காந்தியின் இந்துத்தவ-வர்ணாஸ்ரம படிநிலை முறைகளை எதிர்த்த பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார்:
"காந்தியின் 'பூனா ஒப்பந்தம்', சாகும் வரை உண்ணா விரதம் என்பவை எல்லாம் தீண்டப்படாதவர்களுக்கு எதிரான போர் அறிவிப்பே தவிர தீண்டாமைக்கு எதிரான போர் அறிவிப்பு இல்லை!"

"நாக்கிலே கடவுள் பெயரையும், கக்கத்திலே வாளையும் கொண்ட ஒரு மனிதர் 'மகாத்மா' என்னும் சிறப்புப் பட்டத்துக்குத் தகுதியானவர்தான் என்றால் மோகன்தாஸ் கரம் சந்த் காந்தியும் மகாத்மாதான்."

"காந்தி 21 தடவைகள் எத்தனையோ காரணங்களுக்காக உண்ணா நோன்பு இருந்தார். ஆனால் ஒரு தடவை கூட தீண்டாமை ஒழிப்புக்காகவோ, தீண்டப்படாதவர்களின் முன்னேற்றத்திற்காகவோ அவர் உண்ணா நோன்பு இருந்ததே இல்லை."

"தீண்டப்படாதவர்களின் முதல் எதிரி காந்திதான். ஆகையால் காந்தியைப்பற்றி எச்சரிக்கையாய் இருங்கள்."

"காந்தி சாதி முறையை எப்போதுமே எதிர்க்கவில்லை. அவர் ஒரு சாதி மனிதராகவே வாழ்ந்தார். மடிந்தார்." காந்தி என்பதே அவருடைய சாதியின் பெயர்தான்.

"தீண்டப்படாதவர்களின் போராட்ட வீரராக உரிமை கொண்டாடுவார் காந்தி. ஆனால் உண்மையில் அவர்.... நடந்து கொண்ட முறை என்ன? இந்துக்களுக்கும், இசுலாமியருக்கும், சீக்கியருக்கும் அரசியல் அதிகாரத்தில் கணிசமாக பங்கினை அளிப்பதற்கு ஆயத்தமாக இருந்தார் அவர். அதே வேளையில் சமூக  ஒடுக்குமுறைக்கும், சமூகக் கொடுங்கோன்மைக்கும் எதிராகத் தீண்டப்படாதவர்களைப் பாதுகாப்பதற்கு உள்ள ஒரே வழியான தனித்தொகுதிப் பிரதிநிதித்துவக் கோரிக்கையை அவர் மறுத்தார். நீதி, நெறிமுறை, கட்டாயத்தேவை எல்லாவற்றையுமே புறக்கணித்துவிட்டு அவற்றை மறுத்தார் காந்தி."

"தீண்டப்படாதவர்களுக்கு உதவுகின்ற இந்துக்கள் அல்லாதார் எல்லாரையும் (கிருத்துவர், இசுலாமியர், சீக்கியர்) வெளிப்படையாகவே எதிர்த்து வந்திருப்பவரே காந்தி. இந்துக்கள் அல்லாதாருக்கு இந்துக்கள் உதவலாம். ஆனால் ஒருவருமே தீண்டப்படாதவருக்கு உதவவே கூடாது. இதுவே காந்தியத் தத்துவமாகும்."

பேச்சளவில் மட்டுமல்ல, செயலளவிலும் இதைச் செய்துக் காட்டியவர் காந்தி.....

'1938-ல் மத்திய மாகாணத்தில் டாக்டர் கரே அவர்களால் ஓர் அமைச்சரவை அமைக்கப்பட்டது. நன்றாகத் தகுதி வாய்ந்த தீண்டப்படாத ஒருவரை அவர் அமைச்சராகச் சேர்த்துக் கொண்டார். இந்த அமைச்சரவை காங்கிரஸ் கட்சி மேலிடத்தால் (காந்தியால்) தூக்கி எறியப்பட்டது. அதற்கு டாக்டர் கரே மீது காந்தியால் தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்று.... "தமது புதிய அமைச்சரவையில் ஒரு தீண்டத்தகாதவரை அவர் எப்படி இணைத்துக் கொண்டார்" என்பதுதான்.

இது குறித்து டாக்டர் கரே இப்படி குறிப்பிடுகிறார்.... "எனது இரண்டாவது அமைச்சரவையில் (தீண்டப்படாதவரான) அரிசன் ஒருவரைச் சேர்த்துக் கொண்டேன். அதற்காக காந்தி அவர்கள் என்னை கடுமையாகக் கண்டித்தார்....." எனது செயல் மூலம் சாதாரண எளிய மக்களிடையே பிரிவினைக் கனலை விசிறிவிட்டேன் என்றும், அவர்களின் பதவிப் பேராசையைத் தூண்டிவிட்டதன் மூலம் காங்கிரசின் கொள்கைக்கே கேடு விளைவித்துவிட்டேன் என்றும் மகாத்மா கூறினார்."

அடுத்த அமைச்சரவை டாக்டர் கரே அவர்களால் அமைக்கப்பட்ட போது அதிலே தீண்டப்படாதவர் எவரும் சேர்க்கப்படவில்லை. இதை காந்தி பாராட்டி ஏற்றார்!

இதிலிருந்து காந்தியின் மனப்போக்கு தெள்ளெனப் புரிகிறது அல்லவா? தீண்டப்படாதவர் பார்ப்பான் முதல் சூத்திரன் வரையிலான சதுர் வர்ணத்தார்க்கு அடிமை வேலை செய்ய வேண்டும். அரசியலிலும் போராட்டங்களிலும் பங்கேற்று தீண்டப்படாதவர்கள் ஆயிரமாயிரமாக சாக வேண்டும். ஆனால் ஒருவரும் அமைச்சராகவே கூடாது. உயர் பதவிகளுக்கு வந்துவிடக்கூடாது" இதுவே காந்தியின் செயல்பாடு. காந்தி சமதர்ம வாதியல்ல! சனாதனவாதி!!

கட்ஜு விமர்சனத்துக்குப் பிறகு காந்தியைப்பற்றி மிகப்பலர் புகழ்ந்து எழுதிவருகிறார்கள். தி இந்துவில் 'ஆசை' என்பவர் 14.03.2015 அன்று ஆங்கிலேயர்களின் கையாளா காந்தி? என்னும் தலைப்பிட்டு, காந்தி, மதத்தை அரசியலில் கலந்தவரா? புரட்சியை மழுங்கடித்தாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். தினமணியில் பேராசிரியர் தி. இராசகோபாலன் அவர்கள் 'முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்' என்னும் தலைப்பில், இங்கிலாந்து நாடாளுமன்றம், தன்னுடைய வளாகத்திற்கு எதிராக இன்று (14.03.2015) மகாத்மா காந்தியடிகளுக்குச் சிலை அமைப்பதை சிலாகித்து எழுதியுள்ளார்.

ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதைப்போல் ஒவ்வொரு மனிதருக்கும் இருவேறு குணங்கள் இயல்பாகவே அமைந்துள்ளன. எனவேதான் உலகப் பொதுமறையாத்தத் திருவள்ளுவர் குணம் நாடி குற்றமும் நாடிடக் கூறியுள்ளார்.

காந்தியின் வாய்மொழிகள் சிலவற்றை இவண் காண்போம்:
"எனது கருத்துப்படி சாதி அமைப்பு ஓர் அறிவியல் அடிப்படை கொண்டதாகும்," "ஒரு சமுதாய நெறிமுறைக் கட்டுப்பாட்டை சாதி அமைப்பு உருவாக்குகிறது", "சாதியை ஒழிப்பது என்பது இந்து மதத்தையே தகர்ப்பது ஆகும்."  - காந்தி, 'அரிஜன் இதழ்' 3-6-1947
(காந்தி ஓர் சாதி வெறியர் என்பது புலனாகும்)

"வாழ்க்கையின் சட்டம் என்று வருணசிரம தருமத்தை நான் நம்புகிறேன். நான் குப்பை அள்ளும் ஒரு தோட்டியாக இருந்தால், என் மகனும் ஏன் அப்படி தோட்டியாக இருக்கக் கூடாது? - காந்தி, 'அரிஜன் இதழ்' 3-6-1947
(காட்டு மிராண்டியின் மகன் கடைசிவரை காட்டுமிராண்டியாகவே வாழ வேண்டும் என்கிறார்)

"சாதி இந்துக்களிடமிருந்து தீண்டப்படாதவர்களைப் பிரிப்பதை என் உயிரைக் கொடுத்து நான் எதிர்ப்பேன். மற்றச் சிக்கல்களோடு ஒப்பிடும்போது தீண்டப்படாத வகுப்பினரின் சிக்கல் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை"
                                                                                              - 1931, இலண்டன் வட்டமேசை மாநாட்டில் காந்தி உரை
(மனித உரிமை மறுக்கப்படுவது மகாத்மாவுக்கு மயிரளவு - மழைத்துளியளவாகத் தெரிகிறது)

"ஒரு சனாதன மனிதன் என்று என்னை நானே அழைத்துக் கொள்கிறேன்".  
                                                                                                                                             - காந்தி, 'தரும மாந்தன்' பகிலம் - 4.

"சாதி என்பதன் பொருள் ஒரு மனிதனின் தொழிலை முன்கூட்டியே முடிவு செய்தல் என்பதுதான். தனது உயிர் வாழ்க்கைக்காக தன்னுடைய முன்னோர்களின் தொழிலை மட்டுமே ஒரு மனிதன் மேற்கொள்ள வேண்டும் என்பதே சாதி உணர்த்தும் உட்பொருள்.       - காந்தி: 'வருண வியாவஸ்தா' - பக்கம் 15.
(வெகு மக்கள் கல்வி கற்று வாழ்வில் உயரக்கூடாது என்கிறார்.)

"சூத்திரன் என்பவன் தனது மதக் கடமையாகவே உயர் சாதிக்காரர்களுக்கு ஊழியம் செய்கிறான். அவன் எந்த காலத்திலும் சொந்தமாகச் சொத்து வைத்திருக்கக் கூடாது. அத்தகைய சூத்திரன் மீதுதான் கடவுள்கள் பூ மழை பொழிகின்றனர்.                                                        - காந்தி; வருணவியாவஸ்தா. பக்கம். 15.
(ஏற்றத்தாழ்வோடு படைத்தக் கடவுளை கல்லால் அடிக்கவேண்டும். இதை நியாயபபடுத்துபவரை சொல்லால் அடிக்க வேண்டும். இதை தான் கட்ஜு செய்தார்)

முதலாம் உலகப்போரின்போது அகிம்சாவாதி காந்தியின் அறைகூவல்:
"மிக விரைவாகக் கொல்லக்கூடிய போர்க் கருவிகளைக் கையாளும் முறையை நாம் கற்றுக் கொள்ள வேண்டுமானால் பட்டாளத்தில் நம்மை நாமே பதிவு செய்து கொள்வது நமது கடமை. போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் முறையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
                                                                                                                                             - காந்தி: 23.06.1918-ல் வேண்டுகோள்

"முதலாம் உலகப் போருக்குப் படைவீரர்களைச் சேர்க்கும் இயக்கப் பணியில் நம்மை நாமே இலட்சக்கணக்கான மக்களுடன் இணைத்துக் கொள்வது - இந்தியாவுக்குச் செய்யும் மிகச் சிறந்த தொண்டு என்று நான் நம்புகிறேன்."
                                                                                                                                                                                  - காந்தி: 4.7.1918-ல்.

"பிரிட்டிஷ் பேரரசுக்குக் காணிக்கையாகப் பொருளாக தன்னுடைய உடல் வலிமை மிக்க புதல்வர்கள் எல்லாரையுமே இந்தியா ஒப்படைக்குமாறு செய்வேன்."

இந்தியாவின் விடுதலைக் காலத்தில் இந்து முஸ்லீம் கலவரத்தின் போது காந்தியின் பிரகடனம்:-
"கல்கத்தா நகரம் முழுவதுமே குருதி வெள்ளத்தில் நீச்சல் அடித்தாலும், அந்தக் கலவரம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தாது, ஏனெனில் கள்ளம் இல்லாத மக்கள் விருப்பத்தோடு புரியும் தியாகம் இது"..... "உங்களால் மற்றவர்களை (இசுலாமியர்களை) தாக்க முடியும் என்றால், பிறகு உங்களை எதிர்த்து வேறு எவராலும் ஒரு விரலைக் கூட தூக்கமுடியாது."

உயிர் பலிகள் ஏற்பட்டுவிடக் கூடாது போரினால் என்று போரினை தடுத்து நிறுத்தி புத்தன் துறவறம் பூண்டு அரண்மனையை விட்டு காடேகினார். அகிம்சாவாதி காந்தி இந்துக்களுக்கு அமைதியை போதிக்காமல், இசுலாமியர்களுக்கு இனிய உபதேசம் கூறாமல் மதவெறியைத் தூண்டிவிடுபவராகவே மகாத்மா பேசியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் போயர் சண்டையின் போதும், ஜுலு இனத்தவர் கிளர்ச்சியின் போதும் காந்தி போரில் பிரிட்டிஷாருக்காக பணியாற்றியிருக்கிறார். இந்திய வைசிராய் செம்ஸ்போர்டு பிரபு கூட்டிய முதலாம் உலகப் போர் மாநாடு முடிவுற்றவுடனேயே, வைசிராயின் தனிச் செயலருக்குக் காந்தி இவ்வாறு எழுதினார்:-

"எனக்கு ஒரு கருத்து உண்டு. போர்ப்படைக்கு ஆள் சேர்ப்புப் பணிக்குழுத் தலைவராக நான் மட்டும் ஆகியிருந்தால், உங்களை நோக்கி மழை வெள்ளம் போலப் பெரும் எண்ணிக்கையில் ஆட்களை அனுப்பியிருப்பேன். (இது கட்ஜு கூறியதைப் போல ஏஜென்ட் செய்யும் வேலைதானே?) இந்த நெருக்கடி மிகுந்த நேரத்தில் இந்திய நாடு தன்னுடைய வலிமை வாய்ந்த உடற்கட்டு உள்ள புதல்வர்களையெல்லாம் பிரிட்டிஷ் பேரரசுக்குக் காணிக்கைப் பொருளாக ஆக்குமாறு செய்திருப்பேன்."

"..... பிரிட்டிஷ் ஆட்சிமுறை இயற்கையாகவும் பெரும் அளவிலும்
நல்லதாகும். ஆங்கிலேயர் அரசுக்கு நானாகவே தன்னிச்சையான முழு ஒத்துழைப்பைக் கொடுத்தேன். 'போயர்' அறைகூவலால் 1899-ல் பிரிட்டானியப் பேரரசின் நீடிப்புக்கே அச்சுறுத்தல் ஏற்பட்ட பொழுது அதற்குப் பணிபுரிவதற்காக என்னையே ஒப்படைத்தேன். ..... அதே போன்று 1906-ல் ஜுலு இனத்தவர் கிளர்ச்சி வெடித்தபோதும் அந்த கிளர்ச்சி முடிகிறவரை படையில் பணியாற்றினேன். லேடி ஸ்மித் நிவாரணத்திற்காக மீட்பு பணியை மேற்கொள்ள எண்ணற்ற போர் நடவடிக்கைகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இரண்டு நிகழ்ச்சிகளிலும் நான் வீரப் பதக்கங்கள் பெற்றேன். தென்னாப்பிரிக்காவில் நான் ஆற்றிய படைப்பணிகளுக்காக ஆர்டிஞ்சு பிரபு அவர்களால் கெய்சர்-ஐ-இந்து என்னும் தங்கப் பதக்கம் அளிக்கப் பெற்றேன்!!

இப்படி பிரிட்டிஷ் பேரரசுக்கு உண்மை ஊழியராக இருந்த காந்தி இந்தியா வந்த பின்னர் 'வெள்ளையனே வெளியேறு', வெள்ளையர் ஆடைகளைத் தீயிட்டு எரிப்போம், கதர் ஆடைகளையே உடுப்போம் என காங்கிரஸ் கட்சியில் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றது ஏன்? தென்னாப்பிரிக்காவில் இருந்தவரை ஆங்கிலேயரைப் போல் உடை உடுத்திய அவர் ஏழையைப்போல் இந்தியாவில் உடை மாற்றம் கொண்டதேன்? எல்லாம் வேஷம், வெளிவேஷம்!

உள்ளமெலாம் உயர்சாதி மக்களின் பாதுகாப்பு பற்றியும், உடல் தோற்றம் ஏழை எளிய விவசாயிகளின் தோற்றமாக மாற்றிக் கொண்டு, சூத்திரச் சாதி மக்களையும் தீண்டப்படாத மக்களையும் தன் வாழ்நாளெல்லாம் வஞ்சித்து வந்தார். அதுவும் அந்த அரையாடை உடை தமிழ்நாட்டிற்கு வந்தபோது தஞ்சை விவசாயிகளைக் கண்டு உள்ளம் உருகி உடை மாற்றம் செய்து கொண்டதாக ஒரு வரலாறும் உண்டு!

காந்தி எங்கே சென்றாலும் அவர் வரவேற்கப்பட்டு கோடீஸ்வரர்களுடன் அமர்த்தப்பட்டார். "காந்தியை ஓர் ஏழை என்று காட்டுவதற்காக, காங்கிரஸ் கட்சி இலட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவழிக்க வேண்டி இருந்தது." என்று அவருக்கு நெருங்கிய தொண்டரான 'கவிக்குயில்' திருமதி. சரோஜினி நாயுடு அவர்களே கூறினார். "இரயிலில் மூன்றாவது வகுப்பில் காந்தி பயணம் புரிந்த பொழுதெல்லாம், அவர் ஏறியிருந்த பெட்டி முழுவதுமே அவருக்கு என்றே ஒதுக்கப்பட்டது. காங்கிரசு கட்சித் தொண்டர்கள், கிராமப்புற மக்கள் அவருடன் பயணித்தனர்."  காந்தி ஏழை எளிய விவசாயிகளைப் பார்த்து இப்படி கூறினார்:-

"நீங்கள் விடுதலை கேட்காதீர்கள், ஏனெனில் அது உங்கள் முதலாளியை - எசமானரை ஆத்திரம் அடையச்செய்யும். அவர் உங்களை இழிவாக நடத்துவார்." இது குறித்து டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார்:-

"இந்தியாவின் பணக்கார மனிதர்களே ஏழைகளின் அறங்காவலர்கள்" என்றார் காந்தி, எந்தக் காலத்திலும் எந்தக் இடத்திலும் பொருளாதாரச் சமநிலைக்காக காந்தி அழைப்பு விடுத்ததே இல்லை. வறுமை ஒழிப்புக்காக இயக்கம் நடத்தவும் இல்லை."

"காந்தி நூற்றுக்கு எண்பத்தைந்து (85%) விழுக்காடு இந்தியர்களுக்கு 'இந்தியாவின் தந்தை' ஆகமுடியாது. பதினைந்து விழுக்காடாக உள்ள 'உயர் சாதி மக்களின் தந்தை' என்கிற பட்டத்தையே அவர் பெற முடியும்",  என்றார் டாக்டர் அம்பேத்கர்.

காந்தி கூறுகிறார் "நானோ பிறப்பினால் இந்து, சாதியில் இந்து வாழ்க்கை முறையால் இந்துக்களுக்கெல்லாம் இந்து" என்கிறார். இப்படியிருக்க காந்தியை எப்படி இந்தியாவின் தேசத்தந்தை என்பது? இந்துக்களின் தந்தை என்று வேண்டுமானால் கூறலாம். இந்தியாவில் இந்துக்கள் மட்டுமா வாழ்கிறார்கள்?!

அரசியலில் மட்டும்தான் காந்தி குழப்பவாதியாக இருந்தார் என்பதில்லை. குடும்ப வாழ்க்கையிலும் அவர் அவ்வாறே இருந்துள்ளார். தம்முடைய மனைவி கஸ்தூரிபா ஓர் அடிமையாகத் தமக்கு பணிந்து நடப்பதையே அவர் விரும்பினார். காந்தி கூறுகிறார்:-

"ஓர் இந்திய ஆண்மகன் தன் மனைவியிடம் உரிமையுடன் கேட்பது முழு மனதுடன் கூடிய அவளது கீழ்ப்படிதலையே! அவனால் மனைவியின் எதிர்வாதங்களைத் தாங்கிக் கொள்ளவே முடியாது"!

"மனைவி என்பவள் கணவனின் காம இச்சையைத் தணிக்க வந்த போகப் பொருள்; கணவனின் கட்டளைகளை நிறைவேற்றுவதே அவளது பிறவிப் பயன்"..... என்றே எண்ணினார்.

காந்தி தன்னுடைய மனைவிக்கு இப்படி எழுதினார்:-
"எனது போராட்டம் சாதாரண அரசியலுக்கு உரியது மட்டும் இல்லை. அது மதத் தொடர்பானது."

கஸ்தூரிபா தன் கணவர் காந்தியை நோக்கி இப்படி கூறுகிறார்:-
"நீங்கள் மிகுந்த பிடிவாதக்காரர். மற்றவர் சொல்லை மதிக்கவே மாட்டீர்கள்....."

காந்தியின் மகன் அரிலால் எழுதிய கடிதம் ஒன்றில்....
"என் தந்தையார் தம்முடைய பிள்ளைகளிடம் ஒரு கொடுங்கோலராகவே இருந்தார். 'மகாத்மா' என்னும் சொல்லுக்கு முற்றிலும் மாறுபட்டவராகவே மகன்களிடம் அவர் நடந்து கொண்டார்."

காந்தியின் மகன் அரிலால் இசுலாமியப் பெண்ணான 'குலாப்' மீது காதல் கொண்டார். இந்தியாவில் உள்ள ஒரு வழக்கறிஞரின் அழகிய மகளே குலாப். குலாபுக்கும் தமக்கும் திருமணம் நடைபெறப் போவதைப் பற்றி அரிலாலே தம் தந்தைக்கு மடல் எழுதி வாழ்த்துக் கூறுமாறு கேட்டார். காந்தி அப்போது தென்னாப்ரிக்காவில் இருந்தார். காந்தியோ தனது வாழ்த்தைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனாலும் அரிலால் குலாப் திருமணம் நடந்தேறியது. திருமணத்துக்குப் பிறகும் காந்தி ஒத்துப் போகவில்லை. குலாப் ஒரு பெண் மகவைப் பெற்றெடுத்தபோது பெருந்துயரத்தில் ஆழ்ந்தார் காந்தி.

காந்தியின் இன்னொரு மகன் தேவதாஸ் காந்தி 'இராஜாஜி' என்று புகழ்பெற்ற சி. இராஜகோபால ஆச்சாரியார் அவர்களுடைய மகள் இலட்சுமியைக் காதலித்தார். காந்தியோ அவர்களுடைய கலப்பு மணத்தை எதிர்த்தார். (காந்தி வைசியர் - பனியா - வருணப் படி நிலையில் மூன்றாம் இடத்தில் இருப்பவர், ராஜாஜி பிராமணர், முதல் நிலையில் இருப்பவர்). எதிர்ப்பையும் மீறி இராஜாஜியின் மகள் இலட்சுமியை தேவதாஸ் காந்தி திருமணம் புரிந்துகொண்டார்.

காந்தியின் மனைவி கஸ்தூரிபா கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த சமயம், காந்தியின் மகனான தேவதாஸ் தம்முடைய தாய்க்குப் பென்சிலின் ஊசி மருந்தைச் செலுத்த வேண்டும் என்றார். அதற்காக அந்த மருந்து கல்கத்தாவிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் காந்தி "கடவுள் விரும்பினால், அவர் என் மனைவியை இந்த நோயிலிருந்து காப்பாற்றுவார்" - எனக் கூறி என் மனைவிக்கு எந்த ஆங்கில மருந்துகளையும் தரக்கூடாது, ஊசிகளையும் போடக்கூடாது என்று மறுத்துவிட்டார். கஸ்தூரிபா காலமானார்.

கஸ்தூரிபா இறந்து ஆறு வாரங்களே ஆகியிருந்துபோது காந்தி கடுமையான மலேரியா காய்ச்சலால் துவண்டுவிட்டார். வெளிநாட்டில் உற்பத்தியான 'குயினைன்' என்பதுதான் மலேரியா காய்ச்சலுக்கு மிக உயர்ந்த சிகிச்சை மருந்தாகும். காந்தியோ இரண்டு நாட்களில் 32 கிரெய்ன் குயினைன் மாத்திரைகளை விழுங்கி உயிர் பிழைத்தார். தனக்கொரு நீதி, தன் மனைவிக்கொரு நீதி என வாழ்ந்தவரே காந்தி!

இந்து முஸ்லீம் ஒற்றுமையையும் அரிலால் குலாப் திருமணத்தில் மறுத்தவர், இந்தியாவில் கலப்பு திருமணத்தையும் தேவதாஸ் - இலட்சுமி திருமணத்தையும் எதிர்த்த தந்தை காந்தி எப்படி இந்தியாவின் தேசத்தந்தை ஆகமுடியும்?!

இந்தியாவில் காந்தி காலமெல்லாம் செய்தது கதர் நூல் நூற்க கைராட்டையைச் சுழற்றியது தான். கதரைப்பற்றி காந்தியின் கருத்து:-

"குடியானவர்கள் தங்களுக்குத் தேவையான ஆடைகளை தங்கள் சொந்த வீடுகளில் நெய்து மட்டுமே அணிய வேண்டும். பொறுக்கவே முடியாத கொடுமைகளைப் பணக்காரர்கள் - நில முதலாளிகள் - எத்தகைய வன்முறை வெறித்தனத்தோடு இழைத்தாலும் இவற்றைத் தாங்கிக் கொண்டு கதரை நெய்தபடி இருந்தால் எல்லாமே நல்லமுறையில் அமைந்துவிடும். இந்தியாவின் எல்லா வகையான பொருளாதாரக் கொடுமைகளும் மறைந்து ஒழியும். தனியாட்சியாகிய சுயராஜ்ய விடுதலை தானாகவே வெற்றிக் கனியாக இந்தியரின் மடியில் விழும்."

காந்தியின் முற்போக்குப் பொருளாதார சிந்தனையை மன்மோகன் சிங் - ப. சிதம்பரம் - அருண்ஜேட்லி ஆகியோரால் கூட எட்டவே முடியாது. இந்தக் கைராட்டையை - சர்க்காவை இந்திய தேசியக் கொடியின் மையத்தில் பதித்திட காந்தி முயற்சிகளை மேற்கொண்டார். இந்திய தேசியக் கொடி அமைப்புக் குழுவிலிருந்த - இந்திய அரசமைப்பு சட்டக் குழுவின் தலைவர் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தேசியக் கொடியின் மையத்தில் அசோகா சக்கரத்தை பதியச் செய்துவிட்டார். எனவே காந்தி தேசியக் கொடியையே ஏற்க மறுத்துவிட்டார்.

1947 ஆகஸ்டு பதினைந்தாம் நாள் இந்தியா தன் விடுதலை விழாவைக் கொண்டாடியது. மகாத்மாவோ, டில்லியில் நடைபெற்ற விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. கல்கத்தா மாநகரில் மவுனவிரதம் என்னும் பேசா நோன்பு மேற்கொண்டு துக்க நாள் கொண்டாடினார்.

விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் தலைமை அமைச்சராக பண்டித ஜவகர்லால் நேரு பதவி ஏற்றார். துணைப்பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இடம் பெற்ற சர்தார் வல்லபாய் பட்டேல், காந்தியின் போக்கை கண்டு இவ்வாறு கூறினார்:-

"கிழட்டு மனிதர் வயது முதிர்ச்சியால் தளர்ச்சி அடைந்துவிட்டார்."

"எத்தனையோ மகாத்மாக்கள் தோன்றியிருக்கிறார்கள், எத்தனையோ மகாத்மாக்கள் மறைந்திருக்கிறார்கள். ஆனால் தீண்டப்படாதவர்கள் அப்படியேதான் தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்." இந்தியாவின் இருண்ட காலம்தான் காந்தியின் காலம். மக்கள் பத்தாம் பசலித்தனமான பழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிற காலம் இது; தங்களைப் பற்றித் தாங்களே சிந்திப்பதையும், கற்பதையும், தங்கள் வாழ்வைப் பற்றிய உண்மைகளை ஆய்வு செய்வதையும் மக்கள் நிறுத்திவிட்ட காலம்தான் காந்தியின் காலம். இந்தியாவின் இருண்டகாலம்.           - டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.
(இந்திய அரசமைப்புச் சட்டச்சிற்பி - இந்திய மக்களை முறைசெய்து 'காப்பாற்றிய சட்டப்பிதா!  - தேசப்பிதா!!)

பிர்லா மாளிகையில் 30-01-1948-மாலை காந்தி, 'ரகுபதிராகவ ராஜாராம்' என ராமநாம பஜனையில் ஈடுபட்டிருந்த போது நாதுராம் விநாயக் கோட்சே என்னும் பார்ப்பனனால் கைத்துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைந்தார்.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரால், பூனா ஒப்பந்தத்தினால் உயிர் மீட்பு பெற்ற காந்தி, "வெள்ளையனே வெளியேறு" என போராட்டங்கள் நடத்தியபோதும் வெள்ளையரால் கொல்லப்படாமல் பாதுகாக்கப்பட்ட காந்தி, பார்ப்பனிய இந்து மதத்தை, பார்ப்பனர்களைவிட மிக அதிகமாகவே இந்துத்துவாவை வாழ்நாளெல்லாம் கடைப்பிடித்த காந்தியை, பார்ப்பனன் விநாயக் நாதுராம் கோட்சே மூன்று குண்டுகளால் மோகன்தாஸ் கரம் சந்த் காந்தியின் உயிரைப் பறித்துவிட்டான்.

'ஹே ராம்' என உச்சரித்தபடி உயிர்விட்ட காந்தியை, ராமனோ வேறு எந்த கடவுள்களோ காப்பாற்ற வரவில்லை. ராமனே காந்தியைக் கொன்றான். நாதுராம் கோட்சே என்னும் பெயரிலேயே ராமர் இருக்கிறார்.

அந்த காந்திக்கு இலண்டனில் இன்று (14.3.2015) பிரிட்டிஷ் நாடாளுமன்றச் சதுக்கத்தில், பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், நிறவெறிக்கு எதிராகப் போராடிய நெல்சன் மண்டேலா ஆகியோரின் சிலைகளுக்கு அருகே, 9 அடி உயரமுள்ள வெண்கலச் சிலை 9 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டிருக்கிறது. இந்தியரின் சிலையொன்று முதன்முதலாக இலண்டன் நாடாளுமன்றச் சதுக்கத்தில் நிறுவப்பட்டிருப்பது இந்தியர் அனைவருக்குமே பெருமை. அதில் நானும் மனம் மகிழ்கிறேன். ஆனால்.....

நெல்சன் மண்டேலாவைப்போல் காந்தி ஏழை எளிய விவசாயிகள் மற்றும் தீண்டப்படாதவர்களுக்காகப் போராடியவரா? இந்திய மக்கள் அனைவரையும் சமநிலைப்படுத்தப் பாடுபட்டவரா? பிரிட்டிஷ் பிரதமர் ஜே. இராம்சே மெக்டொனால்டு 1932 செப்டம்பர் 8 ஆம் நாள் காந்திக்கு எழுதிய கடிதத்தில்......

"எத்தனையோ நூற்றாண்டுகளாக திட்டமிடப்பட்ட இழிநிலைக்கு தீண்டப்படாதவர்களான ஒடுக்கப்பட்ட மக்கள், உயர்சாதி இந்துக்களால் விற்பனைப் பொருள்களாக ஆக்கப்பட்டுவிட்டனர். ...... சட்டமன்ற - நாடாளுமன்றப் பேரவைகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய இடங்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு என்று ஒரு குறைந்த அளவு எண்ணிக்கையையாவது பெற வேண்டும் என்பதற்காகவே இந்த தனித் தொகுதிகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது.

நான் புரிந்து கொண்ட அளவில், சாகும்வரையில் உண்ணாநோன்பு என்கிற மிக உச்ச நிலையான ஒரு வழிமுறையை மேற்கொண்டுள்ள நீங்கள் திட்டமிட்டுள்ளதற்கான நோக்கம் மற்ற இந்துக்களோடு ஒடுக்கப்பட்ட மக்களும் கூட்டாகத் தேர்தல் தொகுதிகளைப் பெறுவதற்காகவா என்றால் அப்படியும் இல்லை. ஏனெனில் அந்தக் கூட்டுமுறை முன்பே அளிக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் ஒற்றுமையைக் காப்பாற்றுவதுதான் உங்கள் உண்ணாநோன்பின் நோக்கமா என்றால் அப்படியும் இல்லை.

ஆனால் தங்களது எதிர்கால வாழ்வில் அதிகார ஆதிக்கத் தாக்கத்தை உருவாக்கப்போகும் சட்டமன்ற - நாடாளுமன்றப் பேரவைகளில் தங்கள் சார்பில் குரல் கொடுக்கக்கூடிய, தங்களால் மட்டுமே தேர்வு பெற்ற பிரதிநிதிகளின் குறைந்த அளவு எண்ணிக்கையைக் கூட, இன்றைக்குக் கொடூரமான சோதனைகளில் துன்புறுகின்றவர்கள் என்று ஒப்புக் கொள்ளப்பட்ட ஒடுக்கப்பட்ட வகுப்பினர் பெறுவதைத் தடுப்பதற்காக மட்டுமே நீங்கள் சாகும்வரை உண்ணாநோன்பு இருக்க திட்டமிடுகிறீர்கள். ......." நீங்கள் திட்டமிட்டுள்ள நடவடிக்கை உங்களை நியாயமானவராகவே உண்மையில் நிலை நிறுத்துமா என்கிற கேள்வியை உங்களுக்கு நீங்களே அழுத்தமாகவே கேட்டுப்பாருங்கள்."

"இந்தத் தனித்தொகுதி ஒதுக்கீடு சரியெனப்படுவதால் பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டு ஏதும் மாற்றம் செய்ய விரும்பவில்லை. நீங்கள் டாக்டர் அம்பேத்கருடன் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்" எனக் கூறினார். பூனா எரவாடா சிறையில் உண்ணாநோன்பிருந்த காந்தியை டாக்டர் அம்பேத்கர் பலமுறை சந்தித்துப்பேசி, காந்தியின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே ஒடுக்கப்பட்ட தீண்டப்படாத மக்களுக்கு பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்ட தனி வாக்காளர் தொகுதி முறையை விட்டுக் கொடுத்து தனித்தொகுதி முறையென்னும் 'பூனா ஒப்பந்தத்தில்' கையொப்பமிட்டு பிரச்சினைக்கு முடிவு கண்டார். பிரிட்டிஷ் அரசும் அதையேற்றது:

காந்தியின் உண்ணவிரதத்தால் காந்தியின் உயிருக்கு ஊறு (ஆபத்து) நேர்ந்தால் ஆதிக்க சாதியினர் இந்தியாவெங்கும் உள்ள தம் இன தீண்டப்படாத ஒடுக்கப்பட்ட மக்களைக் கொன்று குவித்து எரித்து விடுவார்கள் என்பதையுணர்ந்தே உயிரினும் மேலான உரிமையை விட்டுக் கொடுத்து காந்தியின் உயிரையும், கோடிக்கணக்கான தீண்டப்படாத மக்களின் உயிரையும் காப்பாற்றினார் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்.

ஏசுவைப்போல், ஆப்ரகாம் லிங்கனைப்போல், நெல்சன்மண்டேலாவைப் போல் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே வாழ்நாளெல்லாம் போராடி, இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதி இந்தியாவை முறை செய்து காப்பாற்றிய இறைவன் டாக்டர் அம்பேத்கருக்கு பிரிட்டிஷ் பாராளுமன்ற வளாகத்தில் நெல்சன்மண்டேலாவுக்குப் பக்கத்தில் சிலை நிறுவி சிறப்பு செய்திருக்கவேண்டும்.

மாறாக.... உயர்சாதி இந்துக்களுக்கும், பணக்காரர் மிட்டா மிராசுகளுக்கு மட்டுமே பாதுகாவலராக இருந்த காந்திக்கு சிலை அமைத்திருப்பது, அவர் தென்னாப்பிரிக்காவிலிருக்கும் போது பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு உண்மையான ஊழியராக இருந்தமையாலேயே சிலை அமைத்து காந்தியை சிறப்புப்படுத்தியிருக்கிறார்கள் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

- தமிழ்மறையான்
கடவுள் அம்பேத்கர் அறக்கோயில்
6, 3வது அவென்யூ, அசோகர் நகர், சென்னை-83.Email: thamizhmaraiyaan@gmail.com