Wednesday, December 14, 2011

டாக்டர் அம்பேத்கரும் சமுதாயமும்


ஆண்ட பரம்பரை தான்! இன்றோ ஆண்டி பரம்பரை நாம்!
சீண்டித் துன்புறுத்தி சிறுபிள்ளைத் தனமாக
தூண்டில் மீனாய் எமை துடிதுடிக்க வைத்திட்டார்.
சாதியென்றும் சாமியென்றும் சண்டாளர் சொல்லிவைத்தார்
அதையந்த சழக்கர்களும் அப்படியே நம்பிவைத்தார்!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றுரைத்த வள்ளுவரும்
சாதியிரண்டொழிய வேறில்லை — என்றிட்ட மூதாட்டியும்-
நம் இரத்தம் நம்மினமே!!
வந்தேறி ஆரியரும்-இனக்கலப்பில் தோன்றியோரும்
வரலாற்றை மாற்றிவைத்தார்.
நம் வளர்ச்சியையும் குன்றவைத்தார்.
நாடாண்ட பரம்பரையை - சுடுகாடாள அனுப்பிவைத்தார்
சூரன் அசுரன் என்ற வீரப் பெயரோடு
போர்க்களத்தில் எதிரிகளை வெட்டிக்குவித்தோரை
சவக்குழிகள் வெட்டிடவே சாத்திரத்தில் வழிவகுத்தான்!
சைவமாய் இருந்த நம்மை அசைவமாய் ஆக்கிவிட்டான்
அசைவமாய் இருந்த அவன் சைவமாய் மாறிவிட்டான்
அறிவுக்குரிய நம்மை அறியாமையில் மூழ்கடித்தான்
ஆடு மாடு மேய்த்து வந்தோன் அரசுக்கு அமைச்சனானான்
அது எப்படி....?
செப்படி வித்தையில்லை - சாணக்கிய தந்திரமே!
தங்கையையும் தாரத்தையும் தாரைவார்க்கத் தயங்காத
ஆரிய கூட்டத்தார் அந்நாளில் அரசருக்கு-
ஆயக்கலைகள் அறுபத்து நான்கினையும்
பாவையர் வாயிலாக படுக்கைதனில் சொல்ல வைத்தான்
மன்னனோ மகிழ்ந்து போனான்
மாட்சிமையில் கவிழ்ந்து போனான்.
விளைவு?
மனு சதியெல்லாம் மனு நீதியாயிற்று!
அரசின் துணையோடு ஆயிரம் மாற்றங்கள்
ஏற்றுக்கொண்டோர் - ஏற்றம் பெற்றார்
எதிர்த்து நின்றோர் - என் போலானார் - உன்போலானார்
தாழ்ந்தே போனார் - தரித்திரர் ஆனார்
வறுமைக் கோலம் வயிற்றை நிரப்ப
எதையோ தின்றோம் - எதை எதையோ தின்றோம்
செத்த மாட்டை தின்றோனெல்லாம்
சொத்து சுகத்துடன் வாழலானான்
சொத்து சுகத்துடன் வாழ்ந்த நாமோ
செத்த மாட்டை சுவைக்கலானோம்.
ஆண்ட இனத்தார் ஆண்டியானதும்
வாழ்ந்த இனத்தார் தாழ்ந்து போனதும்
வரலாறிதுவே வையுங்கள் மனதில்
இதுபோல் ஓரினம் மகரினமாகும்! மகர்-ராஷ்ட்ர இனமது
மகாராட்டிரத்தை ஆண்ட இனமது
இன்றைய நாளில் இழிகுலம் எனப்படும்
இக்குலம் தனிலே அண்ணல் பிறந்தார்
ஆயிரத்து எண்ணூற்று தொன்னூற் றோராமாண்டு
ஏப்ரல் திங்கள் பதினான்காம் நாளில்
ராம்ஜி சக்பால் - பீமாபாய் தனுக்கே
பதினான்காம் பேறாய் பிறந்தார் அண்ணல்!
பள்ளியில் படிக்க பாங்காய் சென்றார்
அள்ளி அணைப்போர் எவருமில்லை
துள்ளி வருகின்ற வேலினைக் கண்டு
தூர விலகிடும் மனிதரைப் போன்று
சிறுவனைக் கண்டு சீறி விலகினர்
தொட்டால் தீட்டு என்றே சொல்லி,
பள்ளியினுள்ளே அனுமதி யில்லை
கல்வி கற்கவும் நாதி யில்லை
கோணித் துண்டை விரித்தே வாயிலில்
அமர்ந்தே கற்க அனுமதித் தனரே
ஒன்றாய் அமர உரிமையில்லை
ஒருவரும் பேச முன்வருவது மில்லை
தனிமை! தனிமை! என்னே கொடுமை?
தாகம் எடுத்தால் தண்ணீருக்காக
வாயைப் பிளந்தே நிற்கவேண்டுமாம்
பானையைத் தொட்டு நீரினைக் குடிக்க
பள்ளி பிள்ளைக்கும் உரிமையில்லை
ஆயிரம் கொடுமை அந் நாளினிலே
ஆயினும் படித்தார் அண்ணல் அம்பேத்கர்
வகுப்பில் முதலாய்த் திகழ்ந்தார் அண்ணல்
வாயிலில் அமர்ந்து படித்தும் கூட!
எத்தனை பேரின்று அவ்வுத்தமர் போலே
இத்தரை மீதினில் படித்துளார் கூறும்!
மாட்டு வண்டியில் போன கதையும்
வீட்டில் இடமின்றி வாழ்ந்த கதையும்
அனைவரும் அறிந்த உண்மை கதையே
அதையே திரும்ப இயம்ப வேண்டுமா?
பாலைவனத் திடையோர் சோலை போலவும்
கானல்நீரிடை நன் நீர்ச்சுனை போலவும்—
மாக்களின் மத்தியில் மனிதராய் நின்று
அண்ணலைத் தொட்டு அன்பாய் அழைத்தார்
ஆசிரியர் பெருந்தகை அம்பேட்கர் என்பவர்!
ஆரியக் குலத்தில் பிறந்தவர் அவரே!!
மற்ற மாணவர் மருட்சியால் மிரண்டனர்
சிறுவன் பீம்ராவ் கூசிக் குறுகினான்.
பிரளயம் எதுவும் ஏற்படவில்லை
தீண்டிய கையும் தீய்ந்திட வில்லை
பிறகேன் தீண்டாமை? பீம்ராவ் திகைத்தார்
அழைத்த ஆசிரியர் அணைத்துக்கொண்டார் - அண்ணல்
அறிவினை மெச்சியே புகழாரம் சூடினார்
பட்ட மரமும் துளிர்த்தது போன்றே—
அண்ணல் இதயத்தில் பசுமை நிறைந்தது.
படிப்பில் வேகம் துடிப்பில் வேகம்
உயர்நிலைப் பள்ளியில் முதலாய் திகழ்ந்தார்!
அன்னை தந்தையார் இட்ட பெயரோ
பிள்ளை பிராயத்தின் பீம்ராவ் என்பதே
நன்றி மறவா நம்மினத் தலைவன்
அன்பு காட்டிய ஆசிரியர் பெயரை
உலகம் புகழ உயர்த்துதற் கென்றே—
தன் பெயரோடு இணைத்துக்கொண்டார்!
அது முதல் பீம்ராவ் அம்பேத்கரானார்!
பி.ஆர். அம்பேத்கர் என்றே ஆனார்?
ஏறிய ஏணியை எட்டி உதைப்போரும்—
தீட்டிய மரம்தனில் கூர்தனைப் பார்ப்போரும்—
தமை தூக்கிய கரம்தனை வெட்டி மகிழ்வோரும்
மலிந்த இந்திய புவிதனிலே தான்
தினைத்துணை நன்றியை பனைத்துணையாய்க் கொண்டு
நல்லாசிரியன் பெயர்தனை தனதாய்க் கொண்டு—
புகழினைற் சேர்த்தார்! புவிபோற்றும் பூமான்
அவர்போல் மனிதர் அவனியில் உண்டோ?
பள்ளியில் முதலாய் திகழ்ந்த அண்ணல்
நாட்டில் முதலாய் தேர்வில் வென்றார்.
உயரப் பறந்திடும் சக்தியை பெற்ற
வல்லுறு தோற்று வீழ்ந்தது கீழே
பறக்கக் கூடாதென சிறகுமுறித்த சிட்டுக்குருவி
எட்டப்பறந்து எட்டப்பறந்து எங்கோ சென்றது;
இமய மீமுகட்டிற்கு... என்னே விந்தை?!
படிக்கவே கூடாதென தடுக்கப் பட்டவர்—
படிக்க முடியுமாவென திகைத்துக் கிடந்தவர்—
படைத்தார் புதிய சகாப்தம் அன்று!
பாமரர் வியந்து பாராட்டினரே!!!
பரோடா மன்னர் உதவியால் அண்ணல்
மேனாடு சென்றார் - உயர்கல்வி பெறவே!
பட்டங்கள் பலவும் பாங்குடன் பெற்றே
பாரோர் வியக்க பாரதம் திரும்பினார்!
பரோடா மன்னர் அரண்மனை தனிலே
பெரியதோர் பதவி பெருமையுடன் ஏற்றார்!
என்னே கொடுமை?!
ஆங்கில நாட்டினிலே இல்லை அக்கொடுமை
அண்ணலின் அறிவை ஏற்றிப் போற்றினர்
அண்ணல் பிறந்த திரு நாட்டினிலோ
படியா மடையர் ஜாதி வெறியர்
இழைத்தக் கொடுமைகள் எண்ணிலடங்கா!
தங்க வீடு தர மறுத்தனராம்!
இருக்கையில் அமர்ந்தால் இழித்துரைத்தனராம்.
நடக்கையில் பாயை சுருட்டியே விட்டு
நடந்து சென்றபின் பாயை விரிப்பாராம்.
ஆபீஸ் பியூனும் அலட்சியத் துடனே
ஆபீஸ் பைலை வீசி யெறிவானாம்-
குனிந்து அண்ணல் கோப்பினை எடுத்தே
கையெ ழுத்திட்டு வைத்ததன் பின்னே-
அதைத் தொடவும் அஞ்சி வேலைக்காரனும்
விலகி நின்றே முணு முணுப்பானாம்-
உண்டாம் இந்நிலை அந்நாளிலே!
உண்டோ அந்நிலை இந் நாளினிலே!
சாதிக் கொடுமைகள் தாளாத அண்ணல்
வேதனை யுடனே வேலையை உதறி
மேலும் படிக்க மேனாடு சென்றார்!
சென்ற விடத்தில் சிறப்புகள் பெற்றார்.
படித்துப் பெற்ற பட்டங்கள் பலவாம்.
படிக்கும் போதவர் எழுதிய நூல்கள்
ஈட்டி தந்த சிறப்புகள் ஆயிரம்!
அண்ணல் எழுதிய ஆராய்ச்சி நூல்கள்
அகில உலகப் புகழைப் பெற்றன.
அண்ணலின் அறிவுத் திறனை வியந்தே
டாக்டர் பட்டங்களை வாரி வழங்கின
இன்றும் உண்டு டாக்டர் பட்டம்;
அதனைப் பெறவோ அறிவு வேண்டாம்
ஆமாம் சாமி போடத் தெரிந்து-
அமைச்சர் பதவியில் இருந்தால் போதும்-
தேடி வருமாம் தெரு சரக்காக!
அண்ணலின் பாதம் பட்டாலே பெருமை
என்றே நினைத்தன பல்கலைக் கழகங்கள்!
அவர்தம் பாதம் பட்டாலே தீட்டு
என்றே மருண்டன இந்திய மிருகங்கள்;
சாதி இல்லை - சாமி இல்லை-
என்றே முழங்கினார் அண்ணல் அம்பேத்கர்!
இந்திய மண்ணில் இருளை அகற்றிட-
மனிதனை மனிதன் அடிமை படுத்திடும்
மனு தர்மத்தை உடைத்திட முயன்றார்.
தனியொரு மனிதனாய் குரலினை உயர்த்தி
கோடானு கோடி மக்களை எழுப்பினார்;
நிலங்கள் நடுங்கின - குளங்கள் குமுறின
மலைகள் அதிர்ந்தன - வானம் பிளந்தது
வெள்ளையர் ஆட்சியும் உண்மை உணர்ந்தது!
காந்தி என்றொரு ஆத்மா நாட்டில்
காங்கிரஸ் இயக்கம் தனையே வளர்த்து-
வெள்ளையர் ஆட்சியை வெளியேற் றிடவே
உண்ணா நோன்பும் - உப்புப் போரும்
தொடர்ந்து நடத்தி தொல்லைகள் கொடுத்தார்.
அண்ணல் அதனை எதிர்க்கவு மில்லை-
ஆதரித்து அறிக்கை விடவு மில்லை-
அதற்கும் விளக்கம் அழகாய் சொன்னார்.
வெள்ளையன் நம்மை அடிமைப் படுத்தினான்
அந்நியன் என்ற ஆதிக்க வெறியால்
இந்துக்கள் நம்மை கொடுமை படுத்துவார்-
சாதிமத மெனும் சாக்கடை குணத்தால்!
இருவரில் எவனும் நல்ல வனில்லை
யாராட்சி நடத்தினால் நமக்கேது நன்மை-
நம்மாட்சி நிறுவிட உழைப்போம் என்றார்
வட்ட மேஜை மாநாடு தனிலே
வாட்டமாய் காந்தி அமர்ந்து விட்டாரே!
வெள்ளையன் வியக்க அண்ணல் அம்பேத்கர்
சாதிக் கொடுமையை சபைமுன் வைத்தார்!
தெருவில் நடக்கவோ - செருப்பணிந்து செல்லவோ-
நல்லுடை உடுத்தவோ - நெய்யிட்டு உண்ணவோ
உரிமையில்லாத ஓரினம் உண்டு! தாழ்த்தப்பட்டோர்
கல்வி கற்கவோ - சொத்து சேர்க்கவோ
கோயிலில் நுழையவோ குளத்தினில் இறங்கவோ
நாட்டில் தடையுண்டு!
ஒருதாய் மக்கள் நாமென்று சொல்லி-
ஒருநூறு பேதம் நமக்குள் எதற்கு?
நாட்டு விடுதலை கிடைத்திடும் முன்னே
மக்கள் விடுதலை பெற்றிட வேண்டும்
என்றே முழங்கி போர்க்கொடி உயர்த்தினார்!
பணிந்தது வெள்ளை ஏகாதி பத்தியம்;
பலவித சலுகைகள் அளித்திட லாயினர்;
வெற்றி முகத்துடன் அண்ணல் திரும்பினார்
வெற்று முகத்துடன் காந்தி திரும்பினார்.
எரவாடா சிறையில் இருக்கையில் காந்தி
உண்ணா நோன்பால் உயிர்விட இருந்தார்
விடுதலை வேண்டியா வெள்ளையனை எதிர்த்தா?
இல்லை இல்லை இல்லவே இல்லை.
அண்ணலின் இலட்சிய கொள்கையை எதிர்த்தே!
தாழ்த்தப் பட்டோருக்கு தனி வாக்கு வேண்டும்
இதுவே அண்ணலின் இலட்சிய முழக்கம்!
இதனை எதிர்த்தே எரவாடா சிறையில்
காந்தி துவக்கினார் உண்ணா நோன்பை
நாடே அண்ணலை நாடி வந்தது-
காந்தியின் உயிரை காத்திடயென்றே.
கஸ்தூரி பாயும் கையேந்தி வந்தார்!?
கருணை தெய்வம் அண்ணல் அம்பேத்கார்;
காந்திக்கு அளித்தார் உயிர்ப் பிச்சையன்று
உயரிய கொள்கையை உடைப்பினில் போட்டே!
பூனா ஒப்பந்தம் உருவாகிற்று! அது
பூனை ஒப்பந்தம் போலாயிற்று!
அரசியல் கட்சியின் தலைவர் காந்தி
ஆனால் நினைவெலாம் ஆண்டவன் மீதே!
சமுதாய அமைப்பின் தலைவர் அண்ணல்
ஆனால் நினைவெல்லாம் ஆள்பவன் மீதே!
‘ராம்ராம் ராம்ராம்’ காந்தியின் கீதம்-
‘நாம்நாம் நாம்நாம்’ அண்ணலின் கீதம்
‘ரகுபதி ராகவா’ காந்தியின் மந்திரம்
‘கற்பி ஒன்றுசேர்’ அண்ணலின் தத்துவம்
‘அகிம்சை அறப்போர்’ காந்தியின் கூக்குரல்
‘கிளர்ந்தெழு! புரட்சிசெய்’ அண்ணலின் முழக்கம்!
வெள்யைன் விடுதலை கொடுத்திடும் முன்னே-
சட்ட வரையொன்று வழங்கிட கேட்டான்
வரைவினை எழுதிட இந்திய மண்ணில்
எவரு மில்லையென எண்ணியே பலரும்
மேலைய நாட்டின் தயவை நாடினர்-
மேலைய நாட்டு மேதைகள் பலரும்
அண்ணல் அம்பேத்கார் பெயரைக் கூறினர்
சாதி வெறியில் மூழ்கி அறிவை
அடகு வைத்த ஆணவப் பேய்கள்
வேறு வழியின்றி அண்ணலை நாடி
சட்ட வரைவினை சமர்ப்பிக்க வேண்டினர்
வெள்ளையன் வியக்க - இவ்வுலகமே வியக்க
அரிய - பெரிய - அறிவினில் முதிர்ந்த
சட்ட வரைவினை வட்டமேஜை
மாநாடு முன்னே வைத்தார் அண்ணல்!
வரைவினைக் கண்ட வெள்ளையன் வியந்து
இனியொரு கனமும் இருப்பது ஆபத்து
விரைவினில் விடுதலை வழங்கிட எண்ணி
மூட்டை முடிச்சை கட்டிட லானான்
விடுதலை கிடைத்தது அண்ணலினாலா!
ரகுபதி ராகவ மகாத்துமாவாலா?
சுதந்திரம் பெற்ற இந்திய நாட்டின்
மந்திரி சபையில் அண்ணலும் அமைச்சர்
சட்ட அமைச்சர் பதவியைக் கொடுத்தே
இந்திய நாட்டின் சட்டம் வரைந்திட
விரும்பி கேட்டனர் வேண்டி நின்றனர்;
தனியொரு மனிதனாய் மூவாறு மாதங்கள்
இராப்பல லுழைத்து இயற்றினார் அண்ணல்
துணையாய் வந்தோர் ஓடி ஒளிந்தனர்-
தனியாய் அண்ணல் துவள்வார் என்றே!
ஆயினும் அண்ணல் அயரா துழைத்து
சட்ட மியற்றி சாதனை புரிந்தார்
சட்ட வடிவில் ஆயிரம் உரிமை
தாழ்த்தப் பட்ட பெருங்குடி கட்கே
கோயிலில் நுழைய கதவுகள் திறந்தன
குளத்தில் இறங்க தடைகள் நீங்கின
பள்ளியில் படிக்க உபகாரச் சம்பளமும்
வேலையில் சேர விகிதாச் சாரம்
தேர்தலில் - பதவியில் ஒதுக்கீ டுண்டு
ஆயிரம் ஆண்டுகள் அடக்கப் பட்டு
ஒடுக்கப்பட்ட தாழ்த்தப் பட்டோர்
சமநிலை எய்தி வாழ்வினில் உயர
அண்ணல் தீட்டினார் சட்ட வடிவாய்
அது கண்டு பொறாத ஆணவப் பேய்கள்
உரிமையை பறிக்க ஓலமிடுகுதாம்
குஜராத் முழுதும் குரைக்கும் சப்தம்
குனிந்து நின்றோர் நிமிரத் தொடங்கினர்.
குட்டிக் கிடந்தோன் கட்டியம் சொல்கிறான்.
இங்கோர் அசாம் உருவாகிடவே
வேண்டு மென்றால் விளையாடிப் பாருங்கள்
மார்தட்டி வரும் தாண்டவ ராயரே-
சோற்றாலடித்த வெறும் பிண்டங்களல்ல நாங்கள்
அண்ணலால் கூர் தீட்டப் பட்ட
போர் வாள்கள்
அம்பேத்கரால் தயாரிக்கப்பட்ட
அணுகுண்டுகள்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானுறையும் தெய்வமாகி விட்ட அண்ணல்
இந்து மதத்தில் இருக்கும் வரையில்
விடிவே யில்லை என்றே வெறுத்து
பௌத்தம் தழுவினார்!
புத்தரை வணங்கினார்!
தனக்குவமை இல்லா அண்ணலை
வணங்கி வாழ்வில் உய்வோம்
உலகில் உயர்வோம்!!


(1980இம் ஆண்டினில் Dr. A. சேப்பன் நடத்திய கவியரங்கில் பெருங்கவிகோ. சேதுராமன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் தமிழ்மறையான் படித்தது)

No comments:

Post a Comment