Saturday, October 15, 2011

கடவுள் அம்பேத்கர்



வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (குறள் : 50)

"கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளை கற்பித்தவன் அயோக்கியன், கடவுளை பரப்புபவன் காட்டுமிராண்டி, கடவுளை வணங்குபவன் முட்டாள்" - என்று எழுதினார் பேசினார் செயல்பட்டார் பகுத்தறிவுப் பெரியார் ஈ.வெ.ரா. அவருடைய வழிவந்தோர் கருப்புச் சட்டையை விடவில்லை. கடவுள் மறுப்புக் கொள்கையை விட்டுவிட்டார்கள்.

கருப்பில் சிவப்புக் கொடியை விடவில்லை. பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கையை பறக்க விட்டுவிட்டார்கள். பகுத்தறிவுக் கொள்கையை புதைத்து விட்டார்கள். வணிகத்தை விட்டு வந்த பெரியார் போராட்டங்களுக்காக சேர்த்தச் சொத்தை பூதம் காப்பது போல் பாதுகாத்து வணிகமாக்கி வளமாக வாழ்கிறார்கள்.

"கடவுளை மற - மனிதனை நினை" - என்னும் மனிதநேயத்தை மறந்துவிட்டு ஆளுங்கட்சிகளுக்காக அறிக்கைவிட்டு ஆலவட்டம் சுற்றும் வீர மனிதர்களாக உலா வருகிறார்கள். பெரியார் பெயரைக் கூறிக்கொண்டு மஞ்சள் துண்டுக்கு மாறி மகாபாரதம், இராமாயணத்தை பரப்பி வருகிறார்கள் தங்கள் தொலைக்காட்சிகளில்! பெரியவர் வே.ஆனைமுத்து விதிவிலக்கு.

கடவுள் மறுப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு (பார்ப்பனர் எதிர்ப்பல்ல, பார்ப்பனரில் பல்லோர் நல்லோர் பாரினில் உண்டு. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கருக்கு உதவிய ஆசிரியர் அம்பேத்கர் போல்)என உறுதியாக வாழும் பகுத்தறிவாளர்களில் நானும் ஒருவன். ஆனால் திராவிடர் கழகத்தான் அல்ல, ஆதிதிராவிடர் குடிமகன். ஆதிதிராவிடர்களை ஒடுக்குபவர்கள் - ஒதுக்குபவர்கள் திராவிடர்களே சாதி இந்துக்களே என்பதையறிந்தவன்.

அண்ணல் அம்பேத்கர் கொள்கையை பரப்பி வருபவன். திருவள்ளுவர் வழியொற்றி புத்தரை புரிந்து கொண்டவன். விளம்பரமின்றி எம் இல்லத்தின் முகப்பில் புத்தர் -திருவள்ளுவர் -பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் திருவுருவச் சிலைகளை நிறுவியும் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியும் வெளியிட்டவன். அவ்வரிசையில் இச்சிறு நூலொன்று ‘கண்கண்ட கடவுள் அம்பேத்கர்!’ அண்ணல் அம்பேத்கர் பெயரால் அறக்கோயில் அமையும் அவரின் 121ஆம் பிறந்த நன்னாளில் 14.4.2011ல் இச்சிறு பனுவல் வெளியிடப்பட்டது காரணக் காரியங்களோடு!

கண்ணால் காணாத கடவுள்களையே இதுநாள்வரை வரம்வேண்டி உலக மக்கள் வணங்கி வருகிறார்கள். கற்பனைக் கல் உருவங்களையே கடவுளென மக்கள் நம்பி வாழ்கிறார்கள். கடவுள்கள் தன்னையும் காத்துக் கொள்ள முடியாதவை. தன்னை வணங்குவோரைஜியும் பாதுகாக்க முடியாதவை என்பதை பூகம்பம், சுனாமி, சூறாவளி போன்ற பேரழிவுகளிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

கடவுள் மனிதனைப் படைக்கவில்லை. மனிதன்தான் கடவுளைப் படைத்தான் என்பதே உண்மை. அச்சத்தின் காரணமாக ஆதி மனிதர்கள் இயற்கைச் சீற்றங்களைக் கண்டு பயந்து உயிர் பலிகளிட்டு வாழ்ந்தார்கள். வந்தேறி ஆரியர்கள் ஆதிமனிதர்களின் அச்சத்தைப் போக்குவதாகக் கூறி தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக வளமான வாழ்வுக்காக கடவுள்கள் என வெவ்வேறு வடிவங்களில் கல்லுருவங்களை வடிக்கச் செய்து கோயில்களைக் கட்டச் செய்து மடமையில் மக்களை ஆழ்த்தினார்கள்.

மன்னர்களும் அவ்வாரியர்களின் மாயையில் மூழ்கியும், ஆரியப் பெண்களின் அழகில் மதி மயங்கியும் கோயில்களையும் கோபுரங்களையும் வானளாவக் கட்டி ஆரியர்களை அக்கோயில்களில் அமரவைத்தும், ஆரிய மங்கைகளை தங்கள் அந்தபுரத்தில் ஆடவைத்து அரவணைத்தும், குடிமக்களை பக்தியில் முழ்க வைத்தும் மடமையில் ஆழ்த்தினார்கள்.

நாட்டை ஆளுபவன் மன்னனானாலும் அவனை ஆட்டுவிப்பவர் ராஜ குருவாகிய ஆரிய பார்ப்பனர்களே! மன்னராட்சியில் மட்டுமல்லாது மக்களாட்சியிலும் இது தொடர்கிறது. ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சித்தார்த்தர் ஆட்சிப்பொறுப்பை ஏற்காமல் துறவறம் மேற்கொண்டதற்குக் காரணம் நதிநீர்ப் பிரச்சினை மட்டுமல்ல. அவர் நாட்டில் நிலவியிருந்த பிணி - மூப்பு - சாக்காடு என்னும் அழித்தொழிக்கவியலாத மூடத்தனங்களே!

ஆம், பிணியாளர்களை ஒதுக்கி வைப்பது போல் சாதி ஏற்றத் தாழ்வுகளின் காரணமாக மக்களை ஒதுக்கி வைத்திருந்தார்கள். முப்பாட்டன் காலத்திலிருந்து வழிவழியாக நடந்து வரும் பழைமை என்னும் மடமை - கடவுள் வழிபாடு என்னும் மூப்பு. அக்கடவுளின் பெயரால் யாகம், வேள்வி, கோயில்களில் பலியிடப்படும் உயிர் பலிகள் ஆகிய சாக்காட்டினைக் கண்டு புத்தர் அஞ்சினார்.

தான் ஆட்சிப் பொறுப்பேற்றாலும் இந்தச் சாதி என்னும் பிணியை, கடவுள் வழிப்பாடு எனும் பழைமையை - மூப்பை, கடவுளின் பெயரால் உயிர் பலியிடப்படும் சாக்காட்டை தன்னால் ஒழிக்க முடியாது என்று எண்ணியே புத்தர் துறவறம் மேற்கொண்டார். காட்டில் கடுந்தவம் புரிந்தும் கடவுளைக் காணாமல், கடவுள் இல்லை என்னும் முடிவுக்கு வந்து, தியானத்தில் மூழ்கி மெய்ஞ்ஞானம் - புத்தித் தெளிவு பெற்று புத்தராகி புத்த தம்மத்தை - பஞ்சசீலத்தை உலகினுக்கீந்தார். இதனை ‘புத்தரை அச்சுறுத்திய பிணி - மூப்பு - சாக்காடு’ என்னும் எனது நூளில் விரிவாக விளக்கியுள்ளேன்.

கடவுள் இல்லை என எழுதிய பெரியார் இன்னொன்றையும் விடுதலையில் மிகத் தெளிவாக எழுதியுள்ளார். அவை "மூவாயிரம் ஆண்டுகளில் இந்த உலகில் நான்கு உத்தமச் சீலர்கள் தோன்றியுள்ளார்கள். அவர்கள் புத்தர் - ஏசு - நபிகள் - டாக்டர் அம்பேத்கர் என எழுதிய அவர் இறுதியில் "பாவிகள் அவரைக் கொன்றுவிட்டார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தந்தை பெரியார் அவர்களால் குறிப்பிடப்பட்ட அந்த நான்கு உத்தமச் சீலர்களில் புத்தர் இன்று உலக நாடெங்கிலும் பல்வேறு வடிவங்களில் சிலைகளாக்கி பக்த்தர்கள் வணங்கி வருகிறார்கள். புத்தர் உருவ வழிபாட்டை வெறுத்தவர், கடவுளை மறுத்தவர், பகுத்தறிவாளர், மனிதநேய மாண்பாளர், ஆனால் அவரையே சிலைகளாக்கி வணங்கி மகிழ்கிறார்கள்.

ஏசுவையும் அவ்வாறே கிருத்துவர்கள் சிலுவையில் அறைந்த நிலையில் சிலைகளாக்கி வணங்கி வருகிறார்கள். கடவுளின் குமாரர் எனக் கூறிக்கொண்ட அவரையே கடவுளாக்கி போற்றி வணங்குகிறார்கள். அவ்வாறே அல்லாவின் இறைத்தூதர் தானென்ற நபிகளையும் இசுலாமியர்கள் உருவமற்ற நிலையில் நெஞ்சில் நிறுத்தித் தொழுகிறார்கள். போற்றிப் புகழ்கிறார்கள். இம்மூவரையும் கண்டவர்கள் யாருமில்லை. வரலாறுகளில் வாசிக்கிறோம், செவி வழிச் செய்திகளால் கேட்டறிகிறோம்.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களை நாம் கண்களால் கண்டுள்ளோம். அவர் பேச்சை நேரில் கேட்டவர்கள் அவரோடு பழகியவர்கள் பலர் இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய அறிவுரைகள் அறவுரைகள், அரசியல் ஆலோசனைகள் நூல் வடிவில் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவருடைய நடை உடை பாவனை, அடிமை மக்களை மீட்டெடுக்க அவர் பட்டப்பாடுகள், ஆற்றிய ஆவேச உரைகளை ஒலி-ஒளிப் படங்களாக கேட்டும் கண்டும் மகிழ்கிறோம்.

"புத்தரைப்போல் ஏசுவைப்போல் நபிகளைப்போல், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமாகிய அண்ணல் அம்பேத்கரை, அவரால் வாழ்வு பெற்ற நாம் ஏன் கடவுளாகப் போற்றி வணங்கக் கூடாது"" என்பது நண்பர் ஜோதியின் கேள்வி! கேள்வியில் நூறு விழுக்காடு நியாயம் உள்ளது.

இந்து மதத்தில் கண்ணால் காணாத கல்லுருவங்களை எல்லாம் கடவுளாகக் கருதி விழுந்து விழுந்து உருண்டு புரண்டு வணங்கிடும்போது, கல்வியறிவில்லாத கடைகோடி மக்களும் கல்வி கற்று வாழ்வில் முன்னேற சட்டம் எழுதி சரித்திரம் படைத்த - நாம் கண்ணால் கண்ட அண்ணல் அம்பேத்கரை ஏன் அறிவுக் கடவுளாக கல்லில் வடித்து வணங்கக் கூடாது?

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும் (குறள் : 388)

என்கிறார் நமது முப்பாட்டன் ஆதித் தமிழ்ப் பாட்டன் திருவள்ளுவர். புத்தர்-ஏசு-நபிகள் உலக மக்களுக்கு, அவரவர் மக்களுக்கு அன்பு-அமைதி-கருணையைப் போதித்தார்கள். "உள்ளவர்கள் இல்லாதோர்க்குக் கொடுங்கள், பட்டினியால் வாடுவோரின் பசியாற்றுங்கள், உழைத்து உருக்குலையும் ஏழை எளியோர்க்கு உதவிடுங்கள்" என்று ஓயாமல் உபதேசங்கள் செய்தார்கள். இம்மூவர் மட்டுமல்ல, இன்னும் ஆயிரக்கணக்கான மகான்கள் மகாத்மாக்கள் உலகெங்கும் தோன்றி இத்தகு உபதேசங்களை உலக மக்களுக்கு உருக்கமாகக் கூறினார்கள். ஒருவர் கூட அடிப்பவரைத் தடுக்கவில்லை.

சிதம்பரம் நடராசர்கூட "நந்தியே விலகி நில்" என்றாரேயொழிய "நந்தா உள்ளே வா" என்றழைக்கவில்லை என்கிறார்கள்.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் மட்டுமே இந்து மத வர்ணாஸ்ரமக் கொடுமைகளினால் -ஏற்றத்தாழ்வுகளால் ஒடுக்கப்பட்டு அடிமைப் படுத்தப்பட்டு தீண்டப்படாதவர்கள் என ஒதுக்கப்பட்ட மக்களையெல்லாம் பட்டியலிட்டு, ஓர் அட்டவணைக்குள் இணைத்து ‘செட்யூல்டு காஸ்ட்’ ‘செட்யூல் டிரைப்’ எனக் குறிப்பிட்டு கல்வி மறுக்கப்பட்ட அவர்களுக்கு கட்டாயக் கல்வி வழங்கிடவும், ஊருக்குள் நுழைய, கல்லூரிகளில் கல்வி கற்க, பட்டங்கள் பெற, பதவிகளில் அமர, பதவி உயர்வு பெற, தனி ஒதுக்கீடு உரிமைகளும் அரசியலில் வாக்களிக்க, தேர்தல்களில் தனித் தொகுதிகளில் - பொதுத் தொகுதிகளில் போட்டியிட, அமைச்சர்களாக குடியரசுத் தலைவர்களாகப் பொறுப்பேற்கத் தானெழுதிய இந்திய அரசமைப்புச் சட்டத்திலே விதிகள் வகுத்து, தாழ்த்தப்பட்ட மக்களை மனிதர்களாக மதித்திட வழியமைத்தார். இதை மீறுவோரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தண்டித்து சிறையிலடைக்கவும் வழிவகுத்த நீதிக் கடவுளானார்.

அநீதியை எதிர்த்து நீதியை நிலைநாட்டி மக்களைப் பாதுகாத்த ராமன், கிருஷ்ணன், பிரம்மா, விஷ்ணு, சிவன், முருகன், விநாயகர், அம்மன்கள் இவர்களெல்லாம் கடவுள் என்றால், இந்தியாவில் இந்து மதக் கொடுமைகளால் ஒடுக்கப்பட்டு தீண்டப்படாதவர்களாக ஒதுக்கப்பட்ட மக்களைப் பாதுகாத்து நல் வாழ்வளித்த அண்ணல் அம்பேத்கரை கடவுளாக வழிப்படுவதில் தப்பில்லை தவறில்லை என்பதே என் உறுதியான எண்ணம்.

புத்தர், திருவள்ளுவர், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் சிலைகள் நிறுவப்பட்டுள்ள எம் இல்லத்தினருகிலேயே ஜோதியின் விருப்பப்படி அண்ணல் அம்பேத்கருக்கு கோயில் கட்டி ‘அம்பேத்கர் அறக்கோயில்’ எனப் பெயரிட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் 121ஆவது பிறந்தநாளில் திறந்து மகிழ்ந்திட்டோம். அவ்வாலயத்தில் அண்ணலின் புகழ் பாடுவோம்! பகுத்தறிவை - சமுதாய உணர்வை - விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்டுவோம்!

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின் (குறள் : 83)

- தமிழ்மறையான்