Thursday, December 1, 2011

தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஓர் ஒப்பாய்வு!

                                                                                              

[டிசம்பர் திங்கள், பெரியார் ஈ.வெ.ரா. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆகிய இவ்விரு சமூக - சமுதாயப் போராளிகளும் மறைந்த மாதம். வரலாற்று நாயகர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் ஒளிவு மறைவின்றி பதிவுச் செய்திடல் ஆயிரம் ஆண்டுகட்குப் பின்னரும் ஆய்வு செய்வோருக்கு தக்கத் தகவல்களைத் தந்துதவும். அவ்வகையில் இவ்வொப்பாய்வு மேற்கொள்ளப் படுகிறது. தேதிவாரியாக அத்தியாகச் சீலர்களின் சீரியப்பணிகள் தொகுக்கப் பட்டுள்ளன.

சாமி சிதம்பரனாரால் தொகுக்கப்பட்டு, அறிஞர் குத்தூசி குருசாமியால் ‘தமிழ் நூல் நிலையத்தாரால்’ 1939-ல் முதன்முதலில் வெளியிடப்பட்டு, தொடர்ந்து பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ள ‘தமிழர் தலைவர்’ என்னும் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு நூலையும்; தனஞ்செய்கீர் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, க. முகிலன் அவர்களால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியினரால், வே. ஆனைமுத்து அவர்களால் 12.6.1992ல் வெளியிடப்பட்ட பி.ஆர். அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு நூலையும் ஆதாரமாகக் கொண்டு இவ்வொப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது... மிகச் சுருக்கமாகத் திருக்குறள்போல்! விரிவாகத் தெரிந்துக்கொள்ள இவ்விரு நூல்களையும் வாங்கிப் படியுங்கள். வெளியீட்டாளர்களுக்கு ‘புத்தர் அறிவுலகம்’ நன்றி நவில்கிறது.                                                         - தமிழ்மறையான்]

முந்திப் பிறந்து (17.09.1879) பிந்தி மறைந்தவர் (24.12.1973) தந்தை பெரியார்
** பிந்திப் பிறந்து (14.04.1891) முந்தி மறைந்தவர் (06.12.1956) பாபாசாகேப் டாக்டர்
    அம்பேத்கர்.

முன்னவர் பிறந்தது தென்புலத்தில் - தமிழகத்தில் - ஈரோட்டில்.
*பின்னவர் பிறந்தது வடபுலத்தில் - மத்திய பிரதேசம் ‘மோவ்’ என்னும்
    இராணுவ முகாமில்.

*  முன்னவரின் பூர்வீகம் கர்நாடகம்.
*பின்னவரின் பூர்வீகம் மராட்டிய மாநிலம் அம்பவாடே கிராமம்.

 முன்னவர் மணந்தது - நாகம்மையை - 1898-ல் 19 வயதில்.
*பின்னவர் மணந்தது - இராமாபாயை - 1906 - ஏப்ரலில் - 16 வயதில்.

 நாகம்மையார் மறைந்தது - 11.05.1933 (இணைந்து வாழ்ந்த ஆண்டுகள்: 35)
*இராமாபாய் மறைந்தது - 27.05.1935 (இணைந்து வாழ்ந்த ஆண்டுகள்: 29)

 முன்னவர் மறுமணம் புரிந்தது - மணியம்மையை - 09.07.1949.
*பின்னவர் மறுமணம் புரிந்தது Dr. சபிதா கபீரை - 15.04.1948.

 முன்னவர் மறைந்தது - வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் - காலை 7.22
    மணியளவில்.
*பின்னவர் மறைந்தது டெல்லி அலிப்பூர் சாலையில் - 26ஆம் எண் அவர்
    இல்லத்தில் - இரவு உறக்கத்தில்.

 முன்னவர் உடல் 25.12.1973-ல் மாலை 4.57 மணிக்கு பெரியார் திடலில்
    நல்லடக்கம்.
*பின்னவர் உடல் 7.12.1956-ல் மாலை 7.30 மணிக்கு பம்பாய் தாதர் இடுகாட்டில்
    எரியூட்டப்பட்டது.

 முன்னவர் வாழ்ந்தது - 94 ஆண்டுகள் 3 மாதங்கள் 7 நாட்கள்.
*பின்னவர் வாழ்ந்தது - 65 ஆண்டுகள் 7 மாதங்கள் 22 நாட்கள்.

இருவர் மனைவியாருமே அவர்கள் இறுதியில் நோயால் துன்புறும்போது அருகில் இல்லை. இருவருமே ஏழை எளிய - தீண்டப்படாத மக்களுக்கு தன்னலம் பேணாது அளப்பரியத் தொண்டுகள் செய்து உலகம் போற்றும் தேசியத் தலைவர்களாக உயர்வு பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்கள்.

 தந்தை பெரியாரின் தந்தையார் வெங்கட்ட நாயக்கர் கல் தச்சருக்குத் துணையாளராக கூலித் தொழிலாளியாகயிருந்து, வண்டி மாடு வைத்து மளிகை வியாபாரம் செய்து பெரும் வணிகராகி செல்வந்தராக உயர்ந்தவர். தாயார் சின்னத்தாய் அம்மையார் கல் சுமக்கும் கூலி வேலை செய்து கணவருக்குத் துணை நின்ற குணவதி. இவர்கட்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் பெரியார் எனப் புகழ்பெற்ற ராமசாமி நாயக்கர். மூத்தவர் ஈ.வெ. கிருஷ்ணசாமி நாயக்கர். தங்கைகள் பொன்னுத்தாய், கண்ணம்மாள் ஆவர்.

*டாக்டர் அம்பேத்கரின் தந்தையார் இராணுவத்தில் சுபேதாராகவும், ஆசிரியராகவும் பணியாற்றினார். இவர் மத்திய பிரதேசத்தில் மோவ் (Military Head quarters of war) என்னுமிடத்தில் பணியாற்றியபோது இவருக்கும் பீமாபாய் என்னும் அன்னைக்கும் 14வது மகனாக 14.4.1891ல் பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் வைத்தப் பெயர் பீம்ராவ் என்பதாகும். இவர்களுடைய பூர்வீகம் மராட்டிய மாநிலத்தில் உள்ள அம்பவடே என்னும் கிராமம். இவர்கள் மகார் எனப்படும் தீண்டப்படாத இனத்தைச் சேர்ந்தவர்கள் என அந்நாளில் ஒதுக்கப்பட்டனர்.

 உயர் வகுப்பில் பிறந்த ராமசாமி 6வது வயதில் திண்ணைப் பள்ளியில் 1885-ல் சேர்க்கப்பட்டார். செல்வந்தர் மகன் ஆனதால் ஆசிரியர் அன்போடு அரவணைத்தார். ஆனாலும் ராமசாமிக்குப் படிப்பில் நாட்டமில்லை. கீழ்ச் சாதியார் வீட்டில் தண்ணீர் அருந்தவேண்டாம் என பெற்றோர் கூறி இருந்தனர். ராமசாமி சாதிபேதம் பாராது அனைவர் வீட்டிலும் தண்ணீர் அருந்துவார். வேடிக்கை விளையாட்டு, குறும்பு, கலாட்டா, சக மாணவர்களோடு சண்டையிடல் என ஐந்தாம் வகுப்போடு, பத்து வயதில் படிப்பு முடிவு பெற்றது 1889-ல்.

*தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த பீம்ராவ் ஆறாவது வயதில் தபோலியில் உள்ள ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டார். உயர்சாதி மாணவர்கள் வகுப்பறையின் உள்ளமர்ந்து கல்வி கற்க, பீம்ராவும் அவர் அண்ணனும் வகுப்பறை வாயிலில் அமர்த்தப்பட்டனர். தாகத்துக்குத் தண்ணீர் எடுத்து அருந்தமுடியாது தீட்டாகி விடும் என்பதால், யாரேனும் ஊற்றும்வரை கையேந்தி நிற்கவேண்டும். சதாராவில் அரசினர் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்தார். பள்ளியில் பார்ப்பன ஆசிரியர் அம்பேத்கர் என்பவர் பீம்ராவ் என்னும் பெயரை பி.ஆர். அம்பேத்கர் என பதிவு செய்தார். பின்னர் அம்பேத்கர் மராத்தா உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியிலும் சேர்ந்து படித்தார்.

* கன்னடிய நாயக்கர், நாயுடு என பெயர்பெற்ற ஆச்சாரம்மிக்க வைணவக் குடும்பத்தில் பிறந்த ராமசாமி பொறுப்பற்று கீழ்ச்சாதியினரோடு பழகுவதைக் காணப்பொறாதப் பெற்றோர் அவருடைய இரண்டு கால்களிலும் சங்கிலியைப் பிணைத்து இருகட்டைகளில் இணைத்துவிட்டனர். ராமசாமியோ இரு கட்டைகளையும் தன் தோளில் சுமந்துகொண்டு ஊர்ச்சுற்றக் கிளம்பிவிடுவார். தன் மகனைத் திருத்த தந்தை அவரை, தன் வியாபாரத்தில் இறக்கிவிட்டார் 1891-ல். தக்க பலன் கிடைத்தது. 19வது வயதில், தன் உறவுப் பெண்ணான நாகம்மையை தன் மகனுக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்துவைத்தார் 1898-ல். பக்குவப்படாத பருவமடையாத நாகம்மை ராமசாமியின் மனைவி யானார். மனைவியைத் தேர்வு செய்வதிலும் ராமசாமி பிடிவாதமாகவே யிருந்தார்.

*1906 ஏப்ரலில், பள்ளியில் படிக்கும் மாணவராயிருக்கையிலேயே, 16 வயதில் அம்பேத்கருக்கு 9 வயதான இராமாபாயை திருமணம் செய்துவைத்தனர். தீண்டப்படாதவர் என்பதால் திருமண ஊர்வலங்கள் நடத்த முடியாது. இரவு நேரத்தில் மணமக்களை இருவர் தோளில் சுமக்க ஊர்வலமாகச் சென்று பம்பாய் பாய்குலா மீன் மார்க்கெட்டில், மீன் விற்கும் மேடையைக் கழுவிச் சுத்தம் செய்து அம்மேடையில் அமர்த்தி அம்பேத்கர் -இராமாபாய் திருமணத்தை நடத்தி முடித்தனர். பருவமடையாத - இராமாபாயை மணந்த அம்பேத்கர் தன் படிப்பைத் தொடர்ந்தார். 1907ல் மெட்ரிகுலேசனில் தேர்வு பெற்றார். தாழ்த்தப்பட்ட மகார் இனத்தில் படித்துத் தேர்வு பெற்ற முதல் மாணவன் என்பதால் பாராட்டுக் கூட்டம் நடத்தி எஸ்.கே. போலே தலைமையில் கெலூஸ்கர் போன்றோர் பாராட்டி பகவன் புத்தர் நூலை பரிசாக அளித்தனர். அம்பேத்கர் பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்தார். பரோடா மன்னர் மாதம் ரூ. 25 கல்வி உதவித்தொகை வழங்கினார். அம்பேத்கர் பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். கல்லூரியில் விருப்பப்பாடமாக சமஸ்கிருதம் கற்க விரும்பினார். அது தேவபாஷை, தீண்டப்படாதவர் கற்கக் கூடாது எனக் கூறி கற்பிக்க மறுத்தனர். அதனால் பார்சி பயின்றார். பின்னர் ஆசிரியரின்றி தன் முயற்சியால் சமஸ்கிருதம் பயின்று, மனுஸ்மிருதியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து மனுசதிகளை அம்பலப்படுத்தினார்.

 உயர் குடும்பம், பணவசதி, பலவகை வாலிபர்களோடு நட்பு, மைனர் பேர்வழி ராமசாமி தாசிகளோடு தொடர்பு கொண்டார். புலால் உண்ணாத வைணவக் குடும்பத்தில் பிறந்த ராமசாமி புலால் உணவுப் பிரியர். தன் மனைவி நாகம்மையை அசைவம் சமைக்கச்சொல்லி பரிமாறச் சொல்வார். அவரையும் அசைவம் உண்ணச்சொல்வார். காவிரிக் கரையில் நண்பர்களோடும், தாசிகளோடும் உறவாடும்போது வீட்டிலிருந்து அசைவ உணவைச் சமைத்து அனுப்பும்படி நாகம்மைக்குக் கூறுவார். அவரும் அப்படியே அனுப்பி வைப்பார். இவற்றால் மனமுடைந்த தந்தை, ராமசாமியைக் கடிந்துகொண்டார். கோபம் கொண்ட ராமசாமி தன் 25வது வயதில் 1904-ல் வீட்டை விட்டு வெளியேறி காசி செல்லும் நோக்கோடு பெஜவாடா சென்றடைந்தார்.

*கபீர் பக்தரான ராம்ஜி சைவ உணவையே உண்டுவந்தார். தந்தை வழியில் தனயனும் சைவ உணவே உண்டார். 1912 ஜனவரியில் அம்பேத்கர் பி.ஏ. தேர்வில் வென்றார். 12.12.12ல் அம்பேத்கரின் மூத்த மகன் யசுவந்தன் பிறந்தான். அம்பேத்கர் ஒப்பந்தப்படி பரோடா சென்று மன்னரிடம் பணியில் சேர்ந்தார். பரோடா அரசின் படைப்பிரிவில் லெஃப்டினென்ட் பதவியில் நியமிக்கப்பட்டார். பணியேற்ற 15வது நாளில் தந்தை நோய்வாய்ப் பட்டிருப்பதாக அறிந்து பம்பாய் திரும்பினார். தந்தை ராம்ஜி 1913 பிப்ரவரி 2ஆம் நாள் மறைந்தார். தன்னிகரில்லாத் தனிப்பண்புகளைக் கொண்ட தந்தை ராம்ஜியின் மறைவு அம்பேத்கரை தடுமாறச் செய்தது. ஆறு வயதில் அன்னையை இழந்த பீமாராவ் 22 வயதில் தந்தையையும் இழந்தார். அயல்நாட்டில் உயர் கல்வி பெற பரோடா மன்னரால் மாதம்தோறும் 11.50 டாலர் கல்வி உதவித்தொகை வழங்கப்பெற்று அம்பேத்கர் அமெரிக்கா சென்றடைந்தார்.

*  வீட்டை வெறுத்து பெஜவாடா வந்த ராமசாமியோடு தஞ்சாவூர் வெங்கட் ரமணய்யரும், கோயம்பத்தூர் கணபதி அய்யரும் நண்பரானார்கள். மூவருமாக சத்திரத்தில் தங்கி பிச்சையெடுத்து உண்ணலானார்கள். பொழுதுபோக்காக இராமாயணம் மகாபாரத விவாதங்களில் ஈடுபடலானார்கள். அய்தராபாத் சமஸ்தானத்தில் பணியாற்றும் பல தமிழர்கள் இவர்களுடைய விவாதங் களைக் கேட்டு மகிழ்வர். இவர்களில் காஞ்சிபுரம் முருகேச முதலியார் இம்மூவரையும் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவளித்து இடமளித்தார். இவர்களுடைய கதாகாலட்சேபம் ஊரில் பிரபலமாயிற்று. பிச்சை எடுப்பதை யும் தொடர்ந்தனர். ரங்கநாத நாயுடு வீட்டில் தொடர் காலட்சேபம். அய்யர்கள் தமிழில் கூறுவதை ராமசாமி தெலுங்கில் தம் சொந்த சரக்குகளோடுக் கூறி மக்களைக் கவர்ந்தார். பெஜவாடாவிலிருந்து மூவரும் கல்கத்தா சென்றார்கள் - அங்கிருந்து காசியை அடைந்தார்கள்.

*அம்பேத்கர் நியூயார்க் சென்றடைந்து 20.7.1913-ல் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். 2.6.1915ல் எம்.ஏ. தேர்வில் வென்றார். பொருளாதாரம், சமூகவியல், வரலாறு, தத்துவம், மாந்தவியல், அரசியல் ஆகியவற்றைப் பயின்றார். ‘இந்தியாவில் சாதிகள்’ என்னும் ஆய்வுக் கட்டுரையை கருத்தரங்கில் படித்தார். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இலண்டனில் பொருளாதாரத்தில் எம்.எஸ். ஆய்வுப் பட்டத்தையும், மற்றும் டி.எஸ்.சி. உயர் ஆய்வு பட்டத்தையும் பெறுவதற்காகவும், பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காகவும் அமெரிக்காவிலிருந்து இலண்டன் புறப்பட்டார்.

*  காசிக்குச் சென்றவுடன் அய்யர்கள் இருவரும் ராமசாமியை தனியே விட்டு விட்டு பிரிந்து சென்றுவிட்டார்கள். காசியில் பார்ப்பனர்களுக்கு சத்திரங்களிலெல்லாம் இலவசச் சாப்பாடு. பார்ப்பனர் அல்லாதாருக்கு ஒரு பிடிச் சோறும் யாரும் தருவதில்லை. ஒரு நாளெல்லாம் பட்டினியில் வாடிய ராமசாமி பார்ப்பனர்கள் சாப்பிட்டு வெளியில் வீசிய எச்சில் இலையிலிருந்து மிச்சம் மீதியை வழித்துச்சாப்பிட்டு பசியைத் தணித்துக்கொண்டார். மறுநாள் தலையை மொட்டையடித்துக்கொண்டு, மீசையை எடுத்துவிட்டு, கோவணான்டியாகி துறவியானார். கங்கை கரையில் சாமியார்களுக்கு வில்வ இலை பறித்துக்கொடுத்து விளக்குப்போடும் வேலை செய்தார். குளிரில் குளிக்காமல் பல் துலக்காமல் பணி செய்ததால் அங்கிருந்தும் விரட்டப்பட்டார். காசியில் பிச்சையெடுக்கும் பார்ப்பன ஆண்களும் பெண்களும் மது அருந்துவதையும் மாமிசம் உண்பதையும், வெளிப்படையாக விபச்சாரம் செய்வதையும் கண்டு பார்ப்பனர்களையும், காசியையும் வெறுத்து எல்லூர் ணிரும்நி T.N. சுப்பிரமணிய பிள்ளை இல்லத்தில் தங்கினார். ராமசாமி எல்லூரில் இருக்கும் செய்தியறிந்து தந்தை வெங்கடநாயகர் எல்லூர் வந்து ராமசாமியை ஈரோடு அழைத்துவந்தார்.

*1916-ல் பரோடா அரசிடமிருந்து கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலம் முடிந்துவிட்டதென திவான் வற்புறுத்தியதால் அம்பேத்கர் படிப்பை பாதியில் நிறுத்தி இந்தியா வந்து ஒப்பந்தப்படி பரோடா அரசில் இராணுவச் செயலாளர் பதவியில் அமர்ந்தார். அங்கு தீண்டாமைக் கொடுமையால் தங்கிட இடம் தர மறுத்தனர். அலுவலக பியூன்கூட அலட்சியப்படுத்தி பைலை தூர நின்று மேசை மீது வீசி எறிவதும், அம்பேத்கர் குடித்திட தண்ணீர்கூட தர மறுப்பதுமான அறியாமையைக் கண்டு மனம் வெதும்பி வேலையை விட்டுவிட்டு பம்பாய் திரும்பினார். பரோடா மன்னருக்கு நிலைமைகளை விளக்கிக் கடிதம் எழுதினார்.

* ஈ.வெ.ரா.வுக்குக் குடும்பத்தில் அதிகப் பொறுப்பு ஏற்படவேண்டும் என்பதற்காக மண்டிக்குத் தன் பெயர் இருந்ததை மாற்றி "ஈ.வெ. ராமசாமி நாயக்கர் மண்டி" என்று பெயரிட்டார். 1905-ல் ஈ.வெ.ரா. வணிகத்தில் மட்டுமல்லாமல் பொதுவாழ்வில் நிகரற்று விளங்கினார். மைனர் விளையாட்டெல்லாம் மலையேறிவிட்டது. சாதி மத பேதமற்று கிருஸ்தவர், முஸ்லிம், தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருடனும் சரிசமமாகப் பழகினார். ஊரார் பிரச்சினைகளை முன்நின்று தீர்த்துவைப்பார். ஒரு சமயம் ஈரோட்டில் பிளேக் நோய் வந்து பலர் மாண்டபோது மக்கள் அஞ்சி ஊரை விட்டு ஓடியபோதும் இவர் அஞ்சாமல் ஊரிலிருந்துகொண்டு தம் தோழர்களோடு ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்து பாதுகாத்துள்ளார். தந்தையார் தானிருந்த பல பொறுப்புகளிலிருந்து விலகி அதில் ஈ.வெ.ராவை அமர்த்தினார். 1906-ல் பண்டிதமணி அயோத்திதாசருடன் தொடர்பு ஏற்பட்டது. அவரால் புத்தரைப் பற்றியும், தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றியும் பெரியார் அறிந்தார்.

*தம் குடும்பத்தின் அன்றாட உணவுக்கு வழிகாண பார்சி மாணவர்கள் இருவருக்கு டியூசன் சொல்லிக் கொடுத்தார். வணிகத்தில் இருப்பவர்களுக்கு ஆலோசனை கூறும் ஒரு வணிக நிறுவனத்தை பொருளாதார நிபுணரான அம்பேத்கர் தொடங்கினார். அங்கும் சாதி குறுக்கிட்டு அதை மூடவைத்தது. இலண்டனில் தனக்கு நன்கு பழக்கமான முன்னாள் பம்பாய் கவர்னர் சைடன்ஹாம் பிரபுவுக்குக் கடிதம் எழுதி, பம்பாயில் உள்ள சைடன்ஹாம் கல்லூரியில் காலியாக உள்ள பொருளாதாரப் பேராசிரியர் பதவியில் தம்மை நியமிக்கும்படி கேட்டுக்கொண்டார். 11.11.1918ல் அரசியல் பொருளாதாரப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 27.1.1919ல் சவுத்பரோ குழுவிடம் வாக்குரிமை குறித்துத் தன் கருத்துகளை எடுத்துரைத்தார். 31.1.1920ல் ‘மூக்நாயக்’ (ஊமைகளின் தலைவன்) என்னும் மராத்தி வார இதழைத் தொடங்கினார் மக்களை விழிப்புறச் செய்ய.


* ஈரோடு வட்டம் தேவஸ்தானக் கமிட்டித் தலைவராகவும், 1918-ல் ஈரோடு நகர சபைத் தலைவராகவும், ஈரோடு கௌரவ மாஜிஸ்ட்ரேட்டாகவும், வியாபாரச் சங்கத் தலைவராகவும், இன்கம்டாக்ஸ் டிரிபியூனல் கமிஷ்னராகவும், ரீடிங் ரூம் செக்ரட்ரியாகவும், பழைய மாணவர் சங்க செக்ரட்ரியாகவும், ஹைஸ்கூல் போர்ட் செக்ரட்ரியாகவும் பத்துப் பதினைந்து ஆண்டுகளாக வகித்துவந்த 29 பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் சேர்ந்தார் ஈ.வெ. ராமசாமி நாயக்கர். வருடத்திற்கு ரூ. 20,000/- வருமானமுள்ள வாணிபத்தை நிறுத்திவிட்டு 1920-ல் காங்கிரசுக்கு உழைத்தார். திரு. காந்தியாரின் சீடரான பிறகு ஆடம்பர ஆடையை விட்டு கதர் உடுத்தினார். கதரை தோளில் சுமந்து தெருத்தெருவாக விற்றார். மது தரும் மரங்களை வெட்ட வேண்டுமென்று காந்தியார் சொன்னபோது சேலம் தாதம்பட்டியில் தன் தோட்டத்திலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார் 1921-ல்.


** அம்பேத்கரின் அறிவாற்றலால், தீண்டாமையொழிப்பில் உள்ள ஈடுபாட்டால் ஈர்க்கப்பட்டவரான கோல்காப்பூர் சிற்றரசர் சாகுமகராஜ் கீழ்சாதி மக்கள் கல்வி கற்கவும், பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும், தனது அரண்மனையில் தீண்டப்படாதவர்களை பதவிகளில் அமர்த்தினார். வழக்கறிஞர்கள் ஆவதற்கு உரிய சன்னது வழங்கினார். தீண்டப்படாத மாணவர்களுக்கு இலவசக் கல்வியும், இலவசத் தங்குமிடமும், இலவச உணவும் அளிக்கும் விடுதிகளை ஏற்படுத்தினார். 20.3.1920ல் கோல்காபூர் சிற்றரசில் மன்கோன் என்ற ஊரில் நடைபெற்ற மாநாட்டில் அம்பேத்கரை தலைமை ஏற்கச்செய்து, மன்னர் சாகுமகராஜ் கூறினார்: "தீண்டப்படாத வகுப்பு மக்களின் முன்னேற்றம் என்ற இலட்சியத்தை அடையும்வரை அம்பேத்கர் ஓயமாட்டார். இந்த நாட்டையே அம்பேத்கர் வழிநடத்திச் செல்லக்கூடிய காலம் வரும்" என்று புகழாரம் சூட்டினார். 5.7.1920ல் உயர் கல்வியைத் தொடர பாரிஸ்டர் பட்டம் பெற இலண்டன் பயணமாகி 30.9.1920ல் கிரேஸ்இன் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். பணப் பற்றாக்குறையால் பசியும் பட்டினியுமாக ஒரு நாளில் ஒருவேளை உணவு மட்டும் உட்கொண்டு இராப்பகலாக ஒரு நாளில் 16 மணி நேரம் படித்தார். இலண்டன் அருங்காட்சியக நூலகம், இந்திய அலுவலக நூலகம், இலண்டன் பல்கலைக்கழக நூலகம் ஆகியவற்றிலெல்லாம் உறுப்பினராகி அந்நூலகங்களைப் பயன்படுத்தி அறிவுப்பசியைத் தணித்துக் கொண்டார். உலக அறிஞர்களுள் ஒருவராகத் தன்னை உயர்த்திக்கொண்டார்.

1921-ல் ஈவெரா ஈரோட்டுக் கள்ளுக்கடை மறியலைத் தலைமைதாங்கி நடத்தி பல நூறுபேர்களோடு சிறைப்பட்டார். மனைவி நாகம்மையும், தங்கை கண்ணம்மாவும் சிறைபடுத்தப்பட்டனர். 1924ல் கதர் பிரச்சாரம் செய்ததற்காகச் சிறை தண்டனை அடைந்தார். சேரன்மாதேவி குருகுல ஆசிரமம் பார்ப்பனர் அல்லாதார் பணஉதவியோடு நடைபெற்று வந்தது. அதில் பார்ப்பனர்களுக்கு உயர்தர உணவு தனியிடத்திலும், பார்ப்பனர் அல்லாதார்க்கு உணவு ஒதுக்குப்புறத்திலும் ஈவெராவுக்கு உட்பட வழங்கப்பட்டதைக் கண்டித்துப் போராடினார். பார்ப்பனர் கை ஓங்கியதால் தமிழ்நாடு காங்கிரஸ் காரியதரிசிப் பதவியை உதறித் தள்ளினார். 1925ல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் "இனி காங்கிரசை ஒழிப்பதே என் வேலை" என்று கூறிவிட்டு காங்கிரசிலிருந்து வெளியேறினார். 2.5.1925ல் குடியரசு பத்திரிகையைத் துவக்கிச் சுயமரியாதைக் கொள்கையை விளம்பரப்படுத்தி எழுதினார்.

*5.7.1923ல் பாரிஸ்டர் பட்டம் பெற்ற அம்பேத்கர் பம்பாயில் வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கினார் அம்பேத்கரின் அரும்முயற்சியால் எஸ்.கே.போலே பம்பாய் மாகாணச் சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். ‘அரசால் கட்டப்பட்ட அல்லது நிர்வகிக்கப்படுகின்ற எல்லாப் பொதுக் குடிநீர் நிலைகளையும் கிணறுகளையும், தருமசத்திரங்களையும், மற்றும் பள்ளிகளையும், நீதிமன்றங்களையும், அலுவலகங்களையும், மருத்துவமனைகளையும் தீண்டப்படாத வகுப்பு மக்கள் பயன்படுத்திட அனுமதிக்கவேண்டும்’ என்று அத்தீர்மானம் 4.8.1923ல் பம்பாய் மாகாணச் சட்டசபையில் நிறைவேறியது. 11.9.1923ல் போலேயின் தீர்மானத்திற்கு ஏற்ப அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. 1923 நவம்பரில் D.Sc., (டாக்டர் ஆப் சைன்ஸ்) என்னும் உயர் ஆய்வுப் பட்டத்தை இலண்டன் பல்கலைக்கழகம் அம்பேத்கர் எழுதிய ரூபாயின் சிக்கல் என்னும் கட்டுரைக்காக வழங்கியது. 20.7.1924ல் தீண்டப்படாத வகுப்பு மக்களின் உயர்வினுக்காகப் போராட ‘பரிஷ்கிரித் ஹித்தகாரணி சபை’ டாக்டர் அம்பேத்கரால் தொடங்கப்பட்டது.

* பெங்களூரில் 1927-ல் காந்தியாரிடம், ஈ.வெ.ரா "வருணாசிரமம் ஒழிந்தால்தான் தீண்டாமை ஒழியும், காங்கிரஸ், இந்துமதம், பார்ப்பன ஆதிக்கம் இவைகளை ஒழிக்க வேண்டும்" என்றார். பிப்ரவரி 17-18, 1929-ல் செங்கல்பட்டில் முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டைக் கூட்டினார். நாஸ்திகர், தேசத்துரோகி, மதத்துரோகி என்ற வசைமொழிகளுக்கு ஆளானார். கலப்புத் திருமணம், விதவைத் திருமணம், புரோகிதமற்றத் திருமணங்கள் நடத்தினார். 23.12.1929-ல் சிங்கபூரில் மலேயா இந்திய காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்று சுயமரியாதைக் கொள்கைகளைப் பரவச்செய்தார். 10.11.1930-ல் ஈரோட்டில் சுயமரியாதை மாநாடு, பெண்கள் மாநாடு, மதுவிலக்கு மாநாடுகளைக் கூட்டினார். 1931ல் விருதுநகரில் சுயமரியாதை மாநாடு நடத்தினார். 13.12.1931-ல் எகிப்து, கிரீஸ், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுகல் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து அரசியல் - தொழிலாளர் நிலைகளைக் கண்டறிந்து, 20.6.1932ல் இங்கிலாந்தில் 50000 தொழிலாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றிவிட்டு 11.11.1932ல் ஈரோடு வந்து சேர்ந்தார்.

*4.1.1925ல் பகிஷ்கிரித் ஹித்தகாரணி சபை ஷோலாப்பூரில் தீண்டப்படாத வகுப்பு மாணவர்கள் தங்கிப்படிக்க விடுதி ஒன்றைத் தொடங்கியது. பெல்காம் மாவட்டம் நிப்பானியில் 10,11-3-1925ல் நடைபெற்ற பகிஷ்கிரித் ஹித்தகாரணி சபையின் மாநாட்டிற்குத் தலைமைத் தாங்கி டாக்டர் அம்பேத்கர் உரையாற்றினார். முதலில் மேற்கொள்ள வேண்டியது அரசியல் மாற்றத்தை விட சமூக மாற்றமே என்பதை வலியுறுத்தினார். மலையாளத்தில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தை மேற்கோள் காட்டி நாராயணகுரு, கேளப்பன், ஈ.வெ.ராமசாமியை சுட்டிக்காட்டிப் பேசினார். 1926 டிசம்பரில் டாக்டர் அம்பேத்கரும், பி.ஜி. சோலங்கியும் பம்பாய் மாகாணச் சபையின் உறுப்பினர் களாக நியமிக்கப்பட்டனர். 24.2.1927ல் பம்பாய் மாகாணச் சட்டசபையில் டாக்டர் அம்பேத்கர் தம் முதல் உரையை நிகழ்த்தினார். 19,20-3-1927ல் மகாத் நகரில் செளதார் குளத்திலிருந்து தீண்டப்படாத வகுப்பு மக்கள் நீர் எடுக்கும் உரிமையை நிலைநாட்ட இரண்டு நாள் மாநாடு நடத்தி 20ம் நாள் டாக்டர் அம்பேத்கர் சௌதார் குளத்தில் இறங்கி குளநீரை அள்ளிப்பருகினார். மாநாட்டிற்கு வந்திருந்த தீண்டப்படாத வகுப்பு மக்களை சாதி இந்துக்கள் தாக்கினர். இதனால் டாக்டர் அம்பேத்கர் வேதனையுற்றார். தம் மக்களை அமைதிப்படுத்தினார். தாக்கியவர்கள்மீது வழக்குத் தொடுத்து நீதிமன்றத்தில் வாதாடினார்.

* 11.5.1933ல் நாகம்மையார் இயற்கை எய்தினார். துக்கத்தில் மூழ்கினார் ஈ.வெ.ரா. ஆனால் மறுநாளே திருச்சி சென்று 12.5.33ல் கிறிஸ்தவ திருமணத்திற்கு விதித்த 144 தடையை மீறினார். 30.12.33ல் ‘இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்’  என்று எழுதியதற்காக சிறைப்பட்டார். குடியரசு வார ஏடு அரசால் தடைசெய்யப்பட்டதால் புரட்சி என்னும் ஏட்டையும், பகுத்தறிவு என்னும் வாரப் பத்திரிகையைத் தொடங்கினார். 13.1.1935-ல் தலீத் எழுத்துச் சீர்திருத்தங்களை தம் இதழ்களில் வெளியிட்டார். 1934ல் கடனுக்காகச் சிறைபிடிப்பது சரியல்ல என்று அச்சட்டத்தை எதிர்த்துச் சிறை சென்றார். (விடுதலை வார ஏடு) 7.3.1936-ல் பத்திரிகையில் இந்தி பொது மொழியாக்குவதை எதிர்த்து எழுதினார். 1.1.1937-ல் தமிழ்நாடு தமிழருக்கே என்று முதன்முதலில் எழுதினார். 13.11.1938ல் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு சென்னையில் நடந்தபோது மாநாட்டில் சித்த மருத்துவ மாமேதை சிற்சபையின் சகோதரி அன்னை தர்மாம்பாள் அவர்கள் ஈவெரா அவர்கட்கு ‘பெரியார்’ என்ற பட்டப்பெயர்ச் சூட்டினார். 6.12.1938ல் இந்தியை எதிர்த்ததற்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். 29.12.1938ல் பெரியார் சிறையிலிருந்த போதே நீதிக்கட்சியின் தலைமைப் பொறுப்பு அவரைத் தேடிவந்தது. 22.4.1939ல் காங்கிரஸ் சர்க்காரால் நிபந்தனையின்றி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.


*3.4.1927ல் டாக்டர் அம்பேத்கர் ஆசிரியராக இருந்து ‘பகிஷ்கரித் பாரத்’ என்ற மாதம் இருமுறை இதழை ஆரம்பித்தார். 6.6.27ல் மகாத் மாநாட்டின்போது தாக்கிய 5 சாதி இந்துக்களுக்கும் நீதிமன்றம் தண்டனை விதித்தது. 4.8.1927ல் மகாத் நகராட்சி 5.1.24ல் நிறைவேற்றிய பொதுக்குளத்தில் தீண்டப்படாதார் தண்ணீர் எடுக்கும் உரிமை அளித்த தீர்மானத்தைத் திரும்பப்பெற்றது. இதனால் மக்கள் நீர் எடுப்பதற்கான உரிமை மறுக்கப்பட்டது. மகாத் சத்தியாக்கிரகக் குழு டிசம்பர் 25,26 ஆகிய நாட்களில் மகாத்தில் சத்தியாகிரகம் நடத்துவது என 15.9.27ல் அறிவித்தது. டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை மராத்தியில் எழுதிய சி.பி. காயர்மோடே டாக்டர் அம்பேத்கரை ‘பாபாசாகேப்’ என்றும், டாக்டர் அம்பேத்கரின் துணைவியார் இராமாபாய் அவர்களை ‘ஆயிசாகேப்’ என்று அழைக்க வேண்டுமென 1927 செப்டம்பரில் கருத்துரைத் தார். 1930 முதல் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் என்றழைப்பது நடைமுறைக்கு வந்தது. 24.12.1927 மாலை 4.00 மணிக்கு மகாத் மாநாடு தொடங்கியது. 7.30 மணிக்கு சாதிக்கொரு நீதி கூறும் ‘மனுஸ்மிருதி’ மாநாட்டில் எரித்து குழிதோண்டி புதைக்கப்பட்டது. 26.12.27ல் நீதிமன்ற ஆணை மாநாட்டில் படிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் மாநாட்டில் பேசினார். 27.12.1927 அன்று நீதிமன்றத்தில் வழக்கு முடியும்வரை மகாத் சத்தியாகிரகத்தைத் தள்ளிவைப்பதென மாநாடு முடிவு செய்தது. மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

* 8.1.1940ல் பெரியார் பம்பாயில் டாக்டர் அம்பேத்கர் அவர்களையும், ஜின்னா அவர்களையும் சந்தித்து நாட்டுப் பிரிவினை குறித்தும், சமுதாய மதஇயல் குறித்தும் தம் கருத்துகளை எழுதி விளக்கினார். ஏப்ரல் 1940-ல் ஆட்சியமைக்க பெரியாரை ஆளுநர் அழைக்க பெரியார் மறுப்பு. 1942-ல் இரண்டாவது முறையாக அவர் மறுப்பு. 27.8.1944ல் சேலத்தில் கூடிய ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் தலைமைதாங்கி, ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகமாக மாற்றினார். 11.5.1946ல் மதுரையில் கருப்புச் சட்டை மாநாடு நடத்தினார். பார்ப்பனரின் தூண்டுதலால் பந்தலுக்குத் தீவைக்கப்பட்டது. கொதித்தெழுந்த தோழர்களை பெரியார் அமைதிப்படுத்தினார். உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப் பட்டது. 1947 ஆகஸ்டு 15ம் நாள் சுதந்திர நாள் இல்லை. ‘துக்கநாள்’ என்று கூறினார். சென்னைக்கு வடநாட்டுக் கவர்னர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து கருப்புக்கொடி காட்டச் செய்தார். 17.7.48ல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மாக்குவதைத் தடுத்தார். 1948ல் குடந்தையில் பேச்சுரிமையை நிலைநாட்ட 144 தடை உத்தரவை எதிர்த்து வெற்றிகண்டார். கவர்னர் ஜெனரலாக இருந்த சி. இராஜகோபாலாச்சாரியார் சென்னை வந்தபோது 22.8.1948 அவரைப் பகிஷ்கரித்ததற்காக சிறைப்பட்டார் பல தோழர்களுடன். 9.7.1949ல் மணியம்மையார் அவர்களைத் திருமணம் செய்து கொண்டதால் திராவிடர் கழகம் பிளவுபட்டது. 17.9.1949ல், அறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாயிற்று.

*3.2.1928ல் சைமன் குழு இந்தியாவிற்கு வந்தது. டாக்டர் அம்பேத்கர் அச்சிடப்பட்ட விரிவான அறிக்கையில் தீண்டப்படாத மக்களின் கல்வி வேலை வாய்ப்பு, அரசியலில் தனி வாக்காளர் தொகுதி, அரசுப் பொது ஊழியங்களில் ஒதுக்கீடு ஆகியன வேண்டும் என கோரிக்கைமனு அளித்தார். 21.6.1928ல் பம்பாய் சட்டக்கல்லூரியில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 3.8.28ல் ‘மகார் வாட்டன்’ முறையை ஒழிப்பதற்கான மசோதாவை பம்பாய் மாகாணச் சட்டசபையில் முன்மொழிந்தார். 23.10.1928ல் சைமன் குழுமுன் சாட்சியம் அளித்தார். தீண்டப்படாத வகுப்பினர் இந்துக்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள் என்றும், பம்பாய் மாகாணச் சட்ட சபையில் தீண்டப்படாத வகுப்பு மக்களுக்கென 22 இடங்கள் ஒதுக்கவேண்டும் என்றும் கூறினார். குழுவினரில் பலர் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு டாக்டர் அம்பேத்கர் ஆதாரபூர்வமான விளக்கங்களை அளித்தார். 17.5.1929ல் சைமன் குழுவிடம் தீண்டப்படாத வகுப்பினரின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி தனியாக அறிக்கை அளித்தார். 13.6.1929ல் டாக்டர் அம்பேத்கர் தொடுத்த மகத் சத்யாகிரக வழக்கில் தீண்டப்படாத வகுப்பினருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

* 1950 ஜனவரி 26ந்தேதி இந்தியக் குடியரசு நாளை தென்னாட்டாரை அடிமைப்படுத்தும் துக்கநாளாகக் கொண்டாடுக என அறிவுறுத்தினார். 1951ல் வகுப்புரிமைக்காக (கம்யூனல் ஜி.ஓ) கிளர்ச்சி நடத்தி இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தச் செய்தார். 1952 ஆகஸ்டு 1ல் ரயில் நிலையங்களில் இந்தி அழிப்புப் போர் தொடங்கினார். (எழும்பூர் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நான் எழும்பூர் அஞ்சல் நிலையப் பலகையிலிருந்த இந்திப் பெயரை தார் பூசி அழித்து கைது செய்யப்பட்டேன்.) 1953ல் ஆபாச விநாயகர் உருவத்தை நாடெங்கும் உடைக்கச் செய்து, உருவ வணக்கக்  கடவுள் - பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தினார். 1954ல் நவம்பர் திங்களில் உலக புத்தர் மாநாட்டில் கலந்துகொள்ள திருமதி மணியம்மையாருடன் பெரியார் பர்மா சென்றார். அங்கு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரைச் சந்தித்து இந்து மதம் குறித்தும் பவுத்தம் மாறுவது பற்றியும் விரிவாக மனந்திறந்துப் பேசினர்.

*3.3.30ல் நாசிக் காலாராம் கோயில் சத்தியாகிரகத்தை டாக்டர் அம்பேத்கர் ஆதரித்துப் பேசினார். பம்பாய் மாகாண கவர்னருக்கு இது குறித்து கடிதம் எழுதினார். 8,9-8-1930ல் நாகபுரியில் நடைபெற்ற தீண்டப்படாத வகுப்பினர் மாநாட்டுக்குத் தலைமைதாங்கி சமூக-சமுதாய-அரசியல் உரிமைகள் குறித்துப் பேசி தீர்மானங்கள் நிறைவேற்றினார். 4.10.1930ல் இலண்டன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க இந்திய வைஸ்ராய் என்ற கப்பலில் புறப்பட்டார். இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் சென்னையிலிருந்து இலண்டன் சென்றடைந்தார். 12.11.1930ல் வட்டமேசை மாநாட்டை பிரிட்டீஷ் பேரரசர் அய்ந்தாம் ஜார்ஜ் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்விலேதான் இரட்டைமலை சீனிவாசன் மன்னருடன் கைகுலுக்காமல் தவிர்த்து, நான் ஒரு தீண்டத்தகாதவன், என்னைத் தொட்டால் நீங்கள் தீட்டாகிவிடுவீர்கள் எனக் கூறி இந்தியாவிலுள்ள தீண்டாமைக் கொடுமையை மன்னருக்கு உணர்த்தினார். வட்டமேசை மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் அவையே வியக்கும்வண்ணம் புள்ளி விவரங்களோடு, ஆவணங்கள் அடிப்படையில் அரியதோர் உரை நிகழ்த்தினார். தீண்டப்படாத மக்களுக்கு ஆங்கிலேய அரசு அணுவளவும் உதவவில்லை எனக் குற்றம் சாட்டினார். தீண்டப்படாத மக்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென பட்டியலிட்டுக் கூறினார். இலண்டன் பத்திரிகைகள் எல்லாம் டாக்டர் அம்பேத்கரை புகழ்ந்து பாராட்டின. அம்பேத்கர் படிக்க பண உதவி செய்த பரோடா மன்னர் விருந்தளித்து மகிழ்ந்தார். டாக்டர் அம்பேத்கர் ஆங்கிலேய அரசு அமைத்த 8 துணைக் குழுக்களில் உறுப்பினராக நியமிக்கப்பட்டு கருத்தறிவிக்க, தீர்மானங்களை தயாரிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டார். கூட்டாட்சிக் குழு மட்டுமே அவர் இல்லாதவொன்று. 19.1.1931ல் வட்டமேசை மாநாடு முடிவுற்று, 27.2.1931ல் டாக்டர் அம்பேத்கர் பம்பாய் வந்தடைந்தார். இலண்டனில் அறிஞர் பெருமக்களும், பத்திரிகைகளும் டாக்டர் அம்பேத்கரின் தொண்டினை, அறிவாற்றலை புகழ்ந்தனர்.

* 1954ல் ஈரோட்டில் புத்தர் மாநாட்டையும், ஆச்சாரியார் கொண்டுவந்த வர்ணாசிரம குலக்கல்வி திட்டத்தையும் ஒழிக்க மாநாடு கூட்டினார். 17.9.54ல் தந்தை பெரியாருக்கு 76வது பிறந்தநாள் விழாவன்று 76 பவுன்கள் தந்தனர். 1955ல் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து மறியல் செய்து வெற்றிகண்டார். பச்சைத் தமிழர் காமராஜர் வெற்றிபெற குடியாத்தம் உபதேர்தலில் உழைத்தார். 1956ல் இராமாயணப் புரட்டை அம்பலமாக்கி, இராமன் கடவுள் என்ற பித்தலாட்டத்தை உடைத்தெறிய இராமன் படஎரிப்புப் போராட்டம் துவக்கி நாடெங்கும் ஆயிரக்கணக்கில் இராமன் படத்தை எரிக்கச்செய்தார். 12.9.1956ல் பொன்மலையில் 78 ஆண்டு பிறந்தநாள் விழா தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்று ‘தன்மான வீரர்’ என்ற டாலர் பரிசு பெற்றார். 16.1.1957ல் திருச்சியில் பார்ப்பனர்களைக் குத்த வெட்டச் சொன்னதாக வழக்குத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டு உடன் விடுவிக்கப்பட்டார். 18.1.57ல் திருச்சியில் வினோபாபாவே பெரியாரைச் சந்தித்தார்.

*வட்டமேசை மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தியதன் பேரில் 1931 மார்ச்சில் தீண்டப்படாத வகுப்பினர் காவல்துறையில் சேருவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அந்த ஆணையின் அடிப்படையிலேயே எம் தந்தையார் மெட்றாஸ் சிட்டி போலீசில் பணியில் சேர்ந்து 1971ல் HC-2115ஆக பணி ஓய்வு பெற்றார். பிரிட்டீஷார் ஆட்சி, காங்கிரசார் ஆட்சி, கழக ஆட்சி ஆகிய மூன்று ஆட்சிகளில் ஊழலற்றுப் பணியாற்றினார்.) மகாத்மா காந்தி டாக்டர் அம்பேத்கரை அவரிடத்தில் வந்து சந்திப்பதாகக் கடிதம் எழுதினார். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் 14.8.1931ல் பம்பாய் மலபார் ஹில், மணிபவனில் தங்கியிருந்த காந்தியை முதன்முதலாக நேரில் சந்தித்து உரையாடினார். தீண்டப்படாதவர்களின் வாழ்வுரிமையைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் விளக்கினார். காந்தியார் கருத்தில் உடன்படாத டாக்டர் அம்பேத்கர் விரக்தி யோடு வெளியேறினார். அன்று மாலை நடைபெற்ற மகளிர் கூட்டத்திலும், தொடர்ந்து நடைபெற்ற ஆண்கள் கூட்டத்திலும் எழுச்சியுரை ஆற்றினார். மறுநாள் இலண்டன் இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க 15.8.1931ல் பம்பாயிலிருந்து புறப்பட்டு 29.8.1931ல் இலண்டன் சென்றடைந்தார்.

* 4.11.1956 அன்று கலக்டர் மலையப்பன் IAS அவர்களுக்கு எதிராக இரு பார்ப்பன நீதிபதிகள் அய்க்கோர்டில் எழுதிய தீர்ப்பைக் கண்டித்து பேசியமைக்காக பெரியாருக்கு கோர்ட் அவமதிப்புக் குற்றத்தின்கீழ் அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது பெரியார் தந்த ஹைகோர்ட் ஸ்டேட்மெண்ட் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. ஹோட்டல்களில் பெயர் பலகையில் பிராமணாள் பெயர் நீக்கப் போராட்டம் 9 மாதங்கள் தொடர்ந்து நடத்தி 1023 பேரை சிறைப்புகச் செய்து 22.3.1957ல் அப்போராட்டத்தில் வெற்றிபெற்றார். 10.8.1957ல் ‘காந்தி கண்டனத்’ தீர்மானம் கொண்டுவந்தார். பெரியாரின் 78ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டி 3.11.57ல் தஞ்சையில் எடைக்கு எடை வெள்ளிப்பணம் கழகத் தமிழர்கள் வழங்கினர். 28.11.57ல் சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்ட நகலை எரித்து 4000 தொண்டர்கள் சிறைபுகுந்தனர். அதில் 15 பேர் சிறைக்கொடுமையால் பலியாயினர்.

*07.9.1931 முதல் 1.12.1931 வரை லண்டனில் இரண்டாவது வட்டமேசை மாநாடு நடைபெற்றது. ஏக இந்தியாவின் பிரதிநிதியாக தான் வந்திருப்பதாக காந்தி மாநாட்டில் கூறினார். டாக்டர் அம்பேத்கர் அதை இடைமறித்து இந்தியாவில் 5ல் ஒரு பகுதியினராக இருக்கின்ற தீண்டப்படாத மக்களின் பிரதிநிதியாக தான் வந்திருப்பதாகக் கூறி அம்மக்களின் ஒதுக்கீடு உரிமைக்காகக் குரல் எழுப்பினார். தீண்டப்படாத வகுப்பினரின் தனி வாக்காளர் தொகுதி கோரிக்கையை முறியடிப்பதற்காக காந்தியும், முகமதியரும் 6.10.1931ல் இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டனர். "தீண்டப்படாத மக்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவினர். அவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதிகள் தந்து பிரித்துவிடக் கூடாது. தீண்டப்படாதவர்கள் கிருத்துவ மதத்துக்கு மாறுவதையோ, முஸ்லிமாக மாறுவதையோ நான் தடுக்கவில்லை. ஆனால் அவர்கள் தனி வாக்காளர் தொகுதி பெற்று தனித்துவம் பெறுவதை நான் என்நாளும் ஏற்கமாட்டேன்" என உறுதியாகக் கூறி காந்தியார் வாதிட்டார். டாக்டர் அம்பேத்கர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரையும், பிரதமர் மக்டொனால்ட் அவர் களையும் சந்தித்து நிலமைகளை விளக்கியதோடு இலண்டனில் பத்திரிகை யாளர்கள், அரசியல் பேரறிவாளர்கள் மத்தியில் தீண்டப்படாதோர் நிலைகளை விளக்கி தனியொருவராக ஆதரவைத் திரட்டினார். பிரிட்டீஷ் அரசு டாக்டர் அம்பேத்கர் கோரிக்கையை ஏற்றது. 1.12.1939ல் இரண்டாவது வட்டமேசை மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. 28.12.1931ல் காந்தி இலண்டனிலிருந்து பம்பாய்க்குத் திரும்பினார். தீண்டப்படாத மக்கள் காந்திக்குக் கறுப்புக்கொடி காட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். 29.1.1932ல் டாக்டர் அம்பேத்கர் இலண்டனிலிருந்து பம்பாய் திரும்பினார். அவருக்கு மக்கள் ஆரவார வரவேற்பு அளித்தனர். அன்று மாலை பரேலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.

* 14.12.1957ல் பெரியாருக்கு திருச்சி செஷன்சு கோர்ட் ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஏககாலத்தில் 6 மாதங்கள் சிறைதண்டனைப் பெற்றார். 8.2.1959ல் அகில இந்திய குடியரசு கட்சியினர் (டாக்டர் அம்பேத்கர் கட்சியினர்) அழைப்பிற்கிணங்கி கான்பூர், லக்னோ, டெல்லி, பம்பாய் போன்ற நகரங்களில் சாதி ஒழிப்புப் பிரச்சாரம் செய்தார். அம்பேத்கர் மக்கள் எல்லாம் அவர் பின்னால் அணிவகுத்தனர். 1960ல் தமிழ்நாட்டின் பிரிவினையை வலியுறுத்தி இந்திய தேசப்படத்தை எரிக்கச் செய்து பெரியார் கைதுசெய்யப்பட்டார். 1962ல் காமராசர் மீண்டும் தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க அரும்பாடுபட்டார். 19.5.1962ல் வாழப்பாடியில் பேசும்போது 1. கடவுள், 2. சாதி மதம், 3. ஜனநாயகம் ஆகிய மூன்றும் பேய்கள் என்றும், 1. பார்ப்பான், 2. பத்திரிகை, 3. அரசியல் கட்சி,
4. தேர்தல், 5. சினிமா ஆகிய ஐந்தும் நோய்கள் என்றும் கூறினார்.


*1932 பிப்ரவரி முதல் ஏப்ரல்வரை பிரிட்டீஷ் அரசால் அமைக்கப்பட்ட வாக்குரிமைக் குழுவுடன் பீகாரிலிருந்து கல்கத்தாவரை சென்றார். 28.2.1932ல் டாக்டர் அம்பேத்கருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. 1.5.1932ல் தன் கருத்தைத் தனி அறிக்கையாக வாக்குரிமைக் குழுவிடம் அளித்தார். 22.5.1932ல் பூனாவில் டாக்டர் அம்பேத்கருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. ‘எந்தத் தீண்டப்படாத வகுப்பில் பிறந்தேனோ, வளர்ந்தேனோ, வாழ்கின் றேனோ அவர்களுடைய முன்னேற்றத்திற்காகத் தொண்டு செய்யும் நிலைமையிலேயே நான் மடியவேண்டும்’ என்பதே என் சூளுரையாகும் என்றார். 26.5.1932ல் பிரிட்டீஷ் பிரதமரையும், அமைச்சர்களையும் சந்திப்பதற்காக டாக்டர் அம்பேத்கர் இலண்டனுக்கு இரகசியப் பயணம் மேற்கொண்டார். 7.6.1932ல் பிரிட்டீஷ் பிரதமரிடம் 22 பக்கங்கள் தட்டச்சு செய்த கோரிக்கையை அளித்தார். 1932 ஆகஸ்டு 4ல் பிரிட்டீஷ் பிரதமர் "தீண்டப்படாத வகுப்பு மக்களுக்கு மாகாண சட்டசபைகளில் தனிஇட ஒதுக்கீடும், தங்கள் பிரதிநிதியைத் தாங்களே தேர்ந்தெடுக்க ஒரு வாக்குரிமையும், பொதுத் தொகுதியில் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க மற்றொரு வாக்குரிமையும் ஆக இரண்டு வாக்குரிமைகளும் அளித்து" தீர்ப்பு வழங்கினார். இந்தத் தீண்டப்படாத மக்களுக்கான வாக்குரிமையை எதிர்த்து காந்தி எரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார் 18.8.1932ல். 17.8.1932ல் டாக்டர் அம்பேத்கர் இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பினார். மூவாயிரம் ஆண்டுகளாக உரிமையற்று அடிமைகளாகக் கிடந்த தீண்டப்படாத மக்களுக்குத் தான் அரும்பாடுபட்டுப் பெற்றுத்தந்த தனிவாக்காளர் ஒதுக்கீட்டு உரிமையை காந்தி எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டதைக் கண்டு துன்புற்று 19.8.1932ல் டாக்டர் அம்பேத்கர் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

* 25.5.64ல் காரைக்கால் அம்பகரத்தூரில் கிடாவெட்டும் நிகழ்ச்சியை எதிர்த்துக் கிளர்ச்சி. 15.6.64 திருச்சியில் மாணவர் முகாமில் அரிய உரை. 10.4.65ல் கம்பராமாயணத்தைத் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம். 7.11.66ல் டெல்லியில் காமராசர் இல்லத்துக்கு தீ வைத்ததைக் கண்டித்து "தமிழர்களே தற்காப்புக்கு சீக்கியர்போல் கத்தி வைத்துக்கொள்ளுங்கள்" என அறிக்கை வெளியிட்டார். 9.8.67ல் திருச்சியில் "திருமதி பெரியார் ஈவெரா மணியம்மை குழந்தைகள் நலவிடுதி" அடிக்கல் நாட்டுவிழா. முதலமைச்சர் அண்ணா அடிக்கல் நாட்டினார். 17.9.67ல் திருச்சியில் பெரியார் சிலை திறப்பு. 6.10.68ல் கரூர் நகரில் பெரியாருக்கு "நகரும் குடில்" புதிய வேன் அன்பளிப்பு. 13.10.68ல் உ.பி. மாநில தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் உரையாற்றி னார். சாதி இழிவு ஒழிய டெல்லி ஆட்சியிலிருந்து நாட்டைப் பிரிக்கவேண்டும் என்றார்.

*21.9.1932ல் டாக்டர் அம்பேத்கர், மாளவியா, எம்.சி. ராஜா ஆகியோர் எரவாடா சிறையில் காந்தியைச் சந்தித்து விவாதித்தல். 22.9.32ல் மீண்டும் டாக்டர் அம்பேத்கர் காந்தியைச் சந்தித்துப் பேசிடல். எம்.ஆர். ஜெயகர், பிர்லா, சுனிலால் மேத்தா, சி. இராஜகோபாலாச்சாரி ஆகியோர் உடன் செல்லல். காந்தியார் தனி வாக்காளர் தொகுதியைத் தட்டிப்பறித்து தனித்தொகுதி வழங்கிட ஒப்புதல் கூறிடல். (இந்திய நாட்டுத் தலைவர் காந்தியாரின் உயிரைக் காத்திட வேண்டி டாக்டர் அம்பேத்கரிடம் கையேந்தல்; கஸ்தூரி பாயும், மகன் தேவதாசும் அம்பேத்கரிடம் மன்றாடுதல். டாக்டர் அம்பேத்கரின் ஆழ்மனதில் தங்கள் மக்களின் உயிரைக் காத்திட உந்துதல் மேலோங்குதல். காந்தியாரின் உயிருக்கு ஊறு என்றால் இலட்சோப இலட்சம் தீண்டப்படாத மக்களின் உயிருக்குப் பேராபத்து ஏற்படும் என்பதைவுணர்ந்து அம்மக்களைக் காப்பாற்ற டாக்டர் அம்பேத்கர் காந்தியின் பூனா ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தல்). 24.9.1932ல் எரவாடா சிறையில் மாலை 5.00 மணிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. 26.9.1932ல் பிரிட்டீஷ் பிரதமர் பூனா ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டார். 7.11.1932ல் மூன்றாவது வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க டாக்டர் அம்பேத்கர் பம்பாயிலிருந்து புறப்பட்டார். 17.11.32ல் மூன்றாவது வட்டமேசை மாநாடு தொடங்கியது. காங்கிரஸ் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. மாகாண அரசுகளில் மட்டும் தீண்டப்படாதவருக்கு தனித் தொகுதிகள் என்றும், மத்திய அரசில் முஸ்லிம்களுக்கும், ஐரோப்பியர் களுக்கும், பிரதிநிதித்துவம் என்ற நிலையை பூனா ஒப்பந்தம் சிதறடித்தது. தீண்டப்படாதவருக்கு வாக்குரிமை மற்றும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தார் டாக்டர் அம்பேத்கர். 24.1.1933ல் டாக்டர் அம்பேத்கர் இங்கிலாந்தி லிருந்து பம்பாய் திரும்பினார்.

* 3.2.1969 நள்ளிரவு 12.12 மணி தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா மறைவு. 25.4.69ல் தர்மபுரியில் தந்தை பெரியார் சிலை திறப்பு - பெரியார் பங்கேற்பு. மதியழகன் தலைமையில் கலைஞர் கருணாநிதி திறந்திடல். 17.9.69ல் தஞ்சாவூரில் பெரியார் சிலை திறப்பு. இரா. நெடுஞ்செழியன் தலைமையில் கலைஞர் கருணாநிதி திறப்பாளர். தந்தை பெரியார் பங்கேற்பு. 27.6.1970ல் தந்தை பெரியாருக்கு "யுனெஸ்கோ விருது" அய்நா பண்பாட்டு அமைப்பு சார்பில் சென்னை ராஜாஜி மண்டபத்தில் கலைஞர் கருணாநிதி வழங்கிடல்.

*30.1.1933ல் டாக்டர் அம்பேத்கர் இந்திய வைஸ்ராயைத் தில்லியில் சந்தித்தார். காந்தியின் அழைப்பின் பேரில் எரவாடா சிறையில் காந்தியைச் சந்தித்தார். கோயில் நுழைவு மட்டும் தீண்டாமையை ஒழித்துவிடாது. சமூக நிலையிலும், உள்ளத்தளவிலும் இரு சாராரையும் உயர்த்திடல் பன்மடங்கு முக்கியம் என காந்தியிடம் கூறினார். 12.2.1933ல் பம்பாய் சட்டசபையில் கிராம பஞ்சாயத்து மசோதா மீது உரையாற்றினார். 1933 ஏப்ரலில் பூனா ஒப்பந்தத்தைத் திருத்தி அமைத்தல் குறித்து காந்தியுடன் உரையாடல். 1933 மார்ச் மாதத்தில் முதல் கிழமையில் பம்பாயில் டாக்டர் அம்பேத்கருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பொதுக்கூட்டத்தில் அம்பேத்கர் "என்னுடைய பணியை, தகுதிகளைப் பற்றி நீங்கள் அளித்த வரவேற்பில் வானளாவ புகழ்ந்திருக்கிறீர்கள். உங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதனான என்னை நீங்கள் தெய்வமாக்கிட விரும்புகிறீர்கள். தலைவரை வழிபடும் இந்த எண்ணம் உங்களுக்குக் கேட்டினையே உண்டாக்கும். ஆகவே அந்த எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறியுங்கள். இவ்வாறு ஒரு தனி மனிதனைக் கடவுளாக்குவதால் உங்களுடைய பாதுகாப்பை நல்வாழ்வை அவரிடம் நம்பி ஒப்படைத்து விடுகிறீர்கள். உங்கள் கடமைகளைப் புறக்கணிக்கிறீர்கள். இதனால் உங்கள் போராட்டம் முழுமையாகத் தோல்வி அடைந்துவிடும்"" என்று எச்சரித்ததோடு, தன் காலில் பிறர் விழுவதை கடுமையாகக் கண்டித்து தன்னம்பிக்கை, தன்மான உணர்வை ஊட்டினார். 14.4.1933ல் முதன் முதலாக டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா பம்பாய், நாசிக், பூனா ஆகிய இடங்களில் கொண்டாடப் பட்டது. தன் பிறந்தநாள் விழாக்கள் ஒன்றிலும் டாக்டர் அம்பேத்கர் கலந்து கொள்ளவில்லை. 24.4.1933ல் பம்பாயிலிருந்து புறப்பட்டு 6.5.1933ல் இலண்டனை அடைந்தார் டாக்டர் அம்பேத்கர்.

* 20.9.70ல் சேலத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா. G.D. நாஜிடு தலைமையில் டாக்டர் சந்திரசேகர் அய்யர் திறந்துவைத்தார். தந்தை பெரியார் பங்கேற்பு. 25.9.70ல் திருநெல்வேலியில் பெரியார் சிலை திறப்பு விழா. குன்றக்குடி அடிகளார் தலைமையில் கலைஞர் கருணாநிதி சிலை திறந்தார். தந்தை பெரியார் பங்கேற்றார். 1.11.70ல் பம்பாயில், பெரியார் - அண்ணா பிறந்தநாள் விழாக்களில் பங்கேற்க மணியம்மையார், வீரமணியுடன் பயணம். 2.12.70ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 23,24-1-71ல் சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு. இராமனுக்குச் செருப்படி, தீயில் எரித்தல், மற்றும் "ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது என்பதை குற்றமாக்கக் கூடாது" என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

*11,28.7.1933 மற்றும் 3.10.33, 7.11.33 ஆகிய நாட்களில் இலண்டனில் லின் லித்தோ பிரபுவின் தலைமையில் அமைக்கப்பட்ட பாராளுமன்றக் கூட்டுக் குழுவில் பங்கேற்று கருத்தறிவித்தார் டாக்டர் அம்பேத்கர். 23.10.33ல் வின்சன்ட் சர்ச்சிலைப் பேட்டிக்கண்டுப் பேசினார். 1933ல் அம்பேத்கரின் ‘இராஜகிருகா’ வீடு பம்பாயில் கட்டி முடிக்கப்பட்டது. அதில் புகழ்மிகு நூலகம் அமைந்தது. 8.1.1934ல் லண்டனிலிருந்து பம்பாய் வந்து சேர்ந்தார். 14.10.1934ல் கெலூஸ்கர் மறைவுற்றார். 27.5.1935ல் இராமாபாய் மறைவுற்றார். 1.6.1935 பம்பாய் சட்டக்கல்லூரியின் முதல்வராக டாக்டர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். 13.10.35ல் இயோலா மாநாட்டில் இந்து மதத்தை விட்டு நீங்கி மற்றொர் மதத்தில் சேரப்போவதாக அறிவித்தார். "இந்துவாகப் பிறந்துவிட்ட நான் இந்துவாக இறக்க மாட்டேன்" என அறைகூவல் விடுத்தார். 25.10.1935ல் டாக்டர் அம்பேத்கரை சந்திப்பதற்காக சங்கராச்சாரியார் தன் குழுவினரை அனுப்பினார். 27.10.1935ல் பேராசிரியர் தர்மானந்த கோசாம்பி டாக்டர் அம்பேத்கரை சந்தித்தல். 10.11.1935ல் நாசிக் சாலையில், தீண்டப்படாத வகுப்பினர் மாநாடு. இந்துக் கடவுள்கள், உருவப் படங்களையும், இந்து நூல்களையும் தீயிட்டுக் கொளுத்தினார். 15.8.1936ல் சுதந்திர தொழிற் கட்சியை நிறுவினார். 1936 செப்டம்பரில் நூல்கள் வாங்கிய வகையில் ஏற்பட்டக் கடனை அடைப்பதற்காக அவருடைய ‘சார்மினார்’ கட்டடத்தை விற்றார். 11.11.1936ல் ஜெனிவா வழியாக இலண்டனுக்குச் சென்றார்.

* 15.3.71ல் சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில் தி.மு.க. அமைச்சர்கள் பதவி ஏற்பு. தந்தை பெரியார் பங்கேற்பு. அமைச்சர்கள் தந்தை பெரியாரிடம் வாழ்த்து பெறல். 19.6.71ல் தமிழ்நாடு அரசு பெரியாரின் அறிவுரையை ஏற்று தமிழ்நாடு அரசு மதுவிலக்கை ஒழித்தது. 28.7.71ல் தமிழ்நாடு அரசு நாலாஞ்சாதி மக்களான சூத்திரர்களுக்காகப் பாடுபடும் அரசுதான் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் பிரகடனம் செய்தல். 17.9.71ல் ஈரோட்டில் தந்தை பெரியார் சிலை திறப்புவிழா. குன்றக்குடிகளார் தலைமையில் முதல்வர் கலைஞர் சிலை திறப்பு. பெரியார் பங்கேற்பு. 93 வயதைக் குறிக்கும் வகையில் 93 நூறு ரூபாய் நோட்டு மாலை (9300 ரூபாய்) வழங்கிடல். 4.11.71ல் சேலத்தில் பெரியாருக்கு வெள்ளி சிம்மாசனம் அன்பளிப்பு விழா. நேரில் பெற்றுக் கொண்டார்.


*17.2.1937ல் பம்பாய் மாகாண சட்டசபைத் தேர்தலில் 175 இடங்களில் சுதந்திரத் தொழிலாளர் கட்சியினர் 1935ஆம் ஆண்டைய ஒதுக்கீடு சட்டத்தின்படி போட்டியிட்டு 17 இடங்களில் வெற்றிபெற்றனர். ஒதுக்கீடு இடங்கள் 15. 17.3.1937ல் மகத் சௌதார் குளம் போராட்ட வழக்கில் டாக்டர் அம்பேத்கர் வெற்றிப்பெற்றார். தீண்டப்படாத வகுப்பாருக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டது. 23.8.1937ல் பம்பாய் மாகாண சட்டசபையில் அமைச்சர்களின் சம்பளம் குறித்து டாக்டர் அம்பேத்கர் பேசினார். "அய்ந்நூறு ரூபாய் ஊதியம் என்பது தகுதி சான்றவர்களை வாழ்வின் மற்ற துறைகளுக்குப் போகுமாறு செய்துவிடும். அதன் விளைவாகப் பணத்தின் மதிப்பை அறியாதவர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வழியேற்பட்டுவிடும்... நாட்டில் உள்ள வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் சம்பளத்தை நிர்ணயித்தால் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் எழுபத்தைந்து ரூபாய்தான் சம்பளமாகப் பெறவேண்டும்" என குறிப்பிட்டார். 17.9.1937ல் கோட்டி முறை ஒழிப்புக் குறித்தும், மகார் வட்டன் நில மானிய ஒழிப்பு மசோதா மீதும் உரையாற்றினார். 18.1.1938ல் தீண்டப்படாத வகுப்பு மக்களை "செட்யூல்டு காஸ்ட்"" என்பதற்குப் பதிலாக, ‘அரிஜன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக எதிர்ப்புத் தெரிவித்து சட்டசபையிலிருந்து டாக்டர் அம்பேத்கரும் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். 13.1.1938ல் அகமத் நகரில் விவசாயிகள் மாநாட்டில் உரையாற்றினார். 12,13.2.1938ல் தீண்டப்படாத இரயில்வே தொழிலாளர் மாநாட்டில் தலைமை தாங்கினார். "பார்ப்பனீயம், முதலாளித்துவம் என்னும் பகை சக்திகளை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்." 27.4.38ல் சட்டசபையில் காவல்துறைத் திருத்தச் சட்ட மசோதா மீது உரையாற்றினார். "கடைசிச் சொட்டு இரத்தம் உள்ளவரை தீண்டப்படாத வகுப்பு மக்கள் சுரண்டப்படுவதை எதிர்ப்பேன்"" என்றார். 1938 செப்டம்பரில் சட்டசபையில் தொழில் தகராறு மசோதாவை மிகக் கடுமையாக எதிர்த்துப் பேசினார். "தொழிலாளர்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் மசோதா பறிக்கிறது" என்றார். 10.11.1938ல் சட்டசபையில் டாக்டர் அம்பேத்கர் அறிவுறுத்தியதற்கு ஏற்ப, அவர் கட்சி உறுப்பினர் பி.ஜெ. ரோஹம் குடும்பக் கட்டுப்பாடு மசோதாவைக் கொண்டுவந்தார். 19.1.1939ல் டாக்டர் அம்பேத்கர் காந்தியைச் சந்தித்தார். காந்திக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டதால் தீண்டப்படாதவர் பிரச்சினை குறித்து விவாதிக்காமல் திரும்பினார்.

* 10.3.1972 முதல் 5 நாட்கள் தஞ்சை மாவட்ட சுயமரியாதை பிரச்சார பயிற்சி வகுப்பில் பெரியார் பங்கேற்று மாணவர்கட்கு அறிவுரைகள் வழங்கினார். 9.5.72ல் தர்மபுரி நாகப்பட்டியில் சுயமரியாதைப் பிரச்சார வகுப்பில் மாணவர்களுக்கு நல்லுரை புகன்றார். 13.8.72ல் கடலூரில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா. சிபி சிற்றரசு தலைமையில் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலை திறந்துவைத்தார். அய்யா அவர்கட்கு விழாவில் ரூ. 10,000/- கொண்ட பணமுடிப்பு வழங்கப்பட்டது. 19.8.73ல் தஞ்சையில் பெரியாருக்கு வேன் அன்பளிப்பு.

*1939ல் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. 25.10.1939ல் பம்பாய் சட்டசபையில் போர் குறித்து டாக்டர் அம்பேத்கர் பேசினார். 1939 அக்டோபர் மூன்றாவது வாரத்தில் பம்பாயில் முதன்முதலாக ஜவஹர்லால் நேரு டாக்டர் அம்பேத்கரை இரண்டு நாட்கள் நேரில் சந்தித்துப் பேசினார். காங்கிரசு அமைச்சரவை பதவி விலகுவது குறித்துப் பேசினர். 8.1.1940ல் பம்பாயில் பெரியார் ஈ.வெ.ரா. குழுவினரும், டாக்டர் அம்பேத்கரும் ஜின்னாவை அவர் வீட்டில் சந்தித்தனர். 22.7.1940ல் சுபாஷ் சந்திரபோஸ் டாக்டர் அம்பேத்கரை பம்பாயில் சந்தித்துப் பேசினார். 1941 ஜனவரியில் அம்பேத்கர் முயற்சியால் இராணுவத்தில் மகார்களை சேர்ப்பது குறித்து ஆராயப்பட்டு மகார் தனிப்படைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. 1941 சூலையில் இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் அம்பேத்கர் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1942 ஏப்ரலில் அனைத்திந்திய தீண்டப்படாத சாதிகள் பேரவையை டாக்டர் அம்பேத்கர் நிறுவினார். இதன் தலைவராக தந்தை N.சிவராஜ், பொதுச்செயலாளராக பி.என். ராஜ்லோஜ் பொறுப்பேற்றனர். 20.7.1942ல் வைஸ்ராய் நிர்வாகக் குழுவில் தொழிலாளர் அமைச்சராக 4 ஆண்டுகள் பதவியிலிருந்து தொழிலாளர்களுக்கு பல நன்மைகளை, உரிமைகளை, சம்பள உயர்வுகளை, எட்டு மணிநேர வேலை நிர்ணயத்தை, பெண் தொழிலாளர்களுக்கு உரிமைகள், சலுகைகளை சட்டமாக்கினார். 13.11.1942ல் பம்பாய் வானொலியில் ‘இந்தியத் தொழிலாளரும் போரும்’ என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். ‘தொழிலாளரும் பாராளுமன்றச் சனநாயகமும்’ என்னும் தலைப்பிலும் உரையாற்றினார். 1945 ஜூனில் ‘காங்கிரசும் - காந்தியும் தீண்டப்படாதவர்களுக்கு செய்தது என்ன’ என்னும் அம்பேத்கரின் நூல் வெளியானது. ஜூலை 1945ல் பம்பாயில் மக்கள் கல்வி கழகத்தை அமைத்தார். 12.3.46ல் சென்னையிலிருந்து ஆசிரியர் மகிபதி, மற்றும் ஆ.பத்மநாபன் அவர்களால் வெளிவந்த ‘ஜெய்பீம்’ ஆங்கில ஏட்டில் தீண்டப் படாதவர்களைப் புறக்கணித்திட கங்கிரசு மேற்கொள்ளும் முயற்சிகள் என்ற தலைப்பில் டாக்டர் அம்பேத்கர் கட்டுரை எழுதினார். 1946ல் பம்பாயில் டாக்டர் அம்பேத்கரின் தொண்டர்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் டாக்டர் அம்பேத்கருக்குச் சொந்தமான ‘பாரத் பூஷன்’ அச்சகம் சாதி இந்துக்களால் எரிக்கப்பட்டது.

* 16,17-9-1973ல் சென்னையில் தந்தை பெரியார் 95வது பிறந்தநாள் விழா சிறப்புடன் நடைபெற்றது. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பணமுடிப்பு தருதல். தந்தை பெரியார் அவர்கள் நேரில் கலந்துகொண்ட இறுதி பிறந்தநாள் விழா இதுதான். 30.9.73ல் மதுரையில் மாபெரும் கருப்புச் சட்டை மாநாடு. மாலையில் தந்தை பெரியார் சிலை திறப்பு. இரா. நெடுஞ்செழியன் சிலையைத் திறந்து வைத்தார். தந்தை பெரியார் கலந்துகொண்டார். 8.12.73ல் "தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு" பெரியார் திடலில், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

*28.5.1946ல் இரண்டாம் உலகப்போர் முடிவுற்றது. 17.6.1946ல் ‘தீண்டப்படாத வகுப்பினர்க்குப் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்’ என்று கோரி பிரிட்டீஸ் பிரதமருக்கு டாக்டர் அம்பேத்கர் தந்தி அனுப்பினார். 1946 சூனில் வைஸ்ராய் நிர்வாகக் குழுவிலிருந்து டாக்டர் அம்பேத்கர் விலகினார். 13.10.1946ல் டாக்டர் அம்பேத்கர் எழுதிய ‘சூத்திரர்கள் யார்’ என்னும் நூல் வெளியிடப்பட்டது. 4.11.1946ல் வின்சன்ட் சர்ச்சிலையும், இலண்டனில் பிரதமர் அட்லியையும் சந்தித்தார். 5.11.1946ல் இங்கிலாந்தில் மக்கள் சபையின் கன்சர்வேடிவ் கட்சி கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் பூனா ஒப்பந்ததத்தை இரத்து செய்யவேண்டும் என்றும், பிரதமர் மெக்டொனால்டு அறிவித்த வகுப்புவாரி ஒதுக்கீடு முறையை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் பேசினார். 1946 நவம்பரில் அரசியலமைப்புச் சட்ட அவைக்கு வங்காளத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 15.11.1946ல் இலண்டனி லிருந்து பம்பாய் திரும்பினார். 15.12.1946ல் அரசியலமைப்புச் சட்ட அவையில் டாக்டர் அம்பேத்கர் முதன்முதலாக ஆற்றிய உரையை அவையின் உறுப்பினர்கள் மற்றும் அரசியல் அறிஞர்கள் பத்திரிகையாளர்கள் பாராட்டினர். 27.3.1947ல் இந்தியாவின் புதிய வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவிற்கு வந்தார். 29.4.1947ல் எந்தவொரு வடிவத்திலும் தீண்டாமையைக் கடைப்பிடிப்பது என்பது ஒழிக்கப்பட்டுவிட்டது என்னும் அரசமைப்புச் சட்ட விதி 17 நிறைவேற்றப்பட்டது. 14.7.1947ல் மவுண்ட்பேட்டன் பிரபு அரசியலமைப்புச் சட்ட அவையைத் தொடங்கிவைத்தார். 22.7.1947ல் டாக்டர் அம்பேத்கர் அரசியல் அமைப்புச் சட்ட அவையின் உறுப்பினராக எம்.ஆர்.ஜெயகர் இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 3.8.1947ல் டாக்டர் அம்பேத்கர் சட்ட அமைச்சராக அவையில் இடம் பெற்றார். 15.8.1947ல் இந்தியா சுதந்திர நாடாயிற்று. அத்துடன் பாகிஸ்தானும் தனி நாடாக உருவாயிற்று. 29.8.1947ல் டாக்டர் அம்பேத்கரை தலைவராகக் கொண்ட அரசியல் சட்ட வரைவுக் குழு அமைக்கப்பட்டது.

19.12.1973ல் சென்னை தியாகராய நகரில் தந்தை பெரியார் ஆற்றிய இறுதி சொற்பொழிவு மரண சாசனம் ஆகியது. 20.12.73ல் குடலிறக்கம் இரனியா நோய்க் காரணமாக சென்னை பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். 21.12.73ல் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு தந்தை பெரியார் விருப்பப்படி அழைத்துச் செல்லப்பட்டார். 24.12.73ல் காலை 7.22 மணியளவில் தந்தை பெரியார் மறைந்தார். அன்று பிற்பகல் சென்னை இராஜாஜி மண்டபத்தில் பெரியார் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. 25.12.73 பிற்பகல் 3 மணிக்கு ராஜாஜி மண்டபத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு மாலை 4.15 மணிக்குச் சென்னை பெரியார் திடல் வந்தடைந்தது. அரசு மரியாதையுடன் அய்யா உடல் மாலை 4.57 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. 6.1.1974ல் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் திராவிடர் கழகத்திற்குத் தலைமை ஏற்றார். 16.3.1978ல் அன்னை ஈ.வெ.ரா மணியம்மையார் மறைந்தார். 17.3.1978ல் திராவிடர் கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளராக கி. வீரமணி பொறுப்பேற்றார்.

** 12.1.1948ல் பாகிஸ்தானுக்கு இந்தியா 55 கோடி ரூபாய் அளிக்க வேண்டுமென்று கோரி காந்தி உண்ணா நோண்பிருந்தார். 15.1.48ல் இந்தியா பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுத்தது. 18.1.48ல் காந்தி உண்ணா நோன்பை முடித்துக்கொண்டார். 25.1.48ல் தீண்டப்படாத சாதிகள் பேரவையின் மாநாட்டினை டாக்டர் அம்பேத்கர் லக்னோவில் கூட்டினார். 30.1.1948ல் மகாத்மா காந்தி நாதுராம் கோட்சே என்னும் பார்ப்பனனால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1948 பிப்ரவரியில் குழுவினர் துணையின்றி டாக்டர் அம்பேத்கர் அல்லும் பகலும் அயராதுழைத்து இந்திய அரசமைப்புச் சட்ட வரைவு நகலை எழுதத் தொடங்கினார். 9.4.1948ல் இந்து சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக டாக்டர் அம்பேத்கர் தலைமையில் ஒரு தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. 15.4.1948ல் மருத்துவமனையில் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சவீதா கபீரை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். குடியரசு தலைவர் ராஜேந்திரபிரசாத் 21.7.48ல் இந்து சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

22.7.48ல் பிரதமர் நேரு இந்து மசோதாவை ஆதரித்து ராஜேந்திரபிரசாத்துக்கு கடிதம் எழுதினார். 4.11.1948ல் டாக்டர் அம்பேத்கர் தான் எழுதிய அரசமைப்புச் சட்ட வரைவு நகலை அரசியலமைப்பு அவையில் முன்மொழிந்தார். 26.11.1949ல் அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 19.12.1949ல் பிரதமர் நேரு இந்து சட்டத்திருத்த மசோதாவிற்கான ஆதரவை மீண்டும் உறுதிசெய்தார். 2.5.1950ல் பவுத்தம் குறித்து பாபாசாகேப் அம்பேத்கர் முதல் தடவையாக பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். 26.5.1950ல் டாக்டர் அம்பேத்கர் இலங்கை கண்டிக்குச் சென்றார். 6.6.1950ல் கொழும்புவில் பவுத்த இளைஞர் சங்கத்தில் ‘இந்தியாவில் பவுத்தத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்ற தலைப்பில் பேசினார். 5.2.1951ல் டாக்டர் அம்பேத்கர் அரசின் சார்பில் இந்து சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். 10.8.1951ல் நேரு மசோதாவை ஆதரிக்காமல் கைவிட்டார். 11.10.1951ல் டாக்டர் அம்பேத்கர் நேரு அமைச்சரவையிலிருந்து விலகினார். 5.1.1952ல் பம்பாய் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் என்.எஸ். கஜ்ரோல்கர் தோற்கடித்தார்.

** 9.3.1952ல் பம்பாய் மாகாணத்திலிருந்து மாநிலங்கள் அவைக்கு டாக்டர் அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 5.6.1952ல் அமெரிக்காவில் கொலம்பியாப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டத்தை (Doctor of Laws and Letters) நேரில் பெற்றார். 15.6.1952ல் நியூயார்க்கிலிருந்து பம்பாய் திரும்பினார். 1954 ஏப்ரலில் பாந்தரா நாடாளுமன்ற ரிசர்வ் தொகுதியில் இடைத்தேர்தலில் டாக்டர் அம்பேத்கர் போட்டியிட்டார். தோல்வியடைந்தார். 1954 மே மாதத்தில் புத்தர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இரங்கூன் சென்றார். 12.9.1954ல் டாக்டர் அம்பேத்கர் மாநிலங்களவையில் தீண்டாமை (குற்றங்கள்) மசோதா மீது பேசினார். 3.10.1954ல் அனைத்திந்திய வானொலியில் ‘என்னுடைய தத்துவம்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 3.1.1955ல் இரங்கூனில் பெரியார் ஈ.வெ.ராவுடன் டாக்டர் அம்பேத்கர் பௌத்தம் குறித்து உரையாடினார். 14.1.1955ல் பம்பாயில் பவுத்தம் குறித்து சொற்பொழிவு ஆற்றினார். 24.5.1955ல் பவுத்த மதத்தில் தான் 1956 அக்டோபர் மாதத்தில் சேரப்போவதாக அறிவித்தார். 25.12.1955ல் தில்லியில் தெகு சாலையில் புத்தரின் சிலையை டாக்டர் அம்பேத்கர் நிறுவினார். தமிழ்நாட்டிலிருந்து IAS நேர்முகத் தேர்வுக்காக டெல்லி சென்ற ஆ.பத்மநாபன் 27.1.1956ல் தேர்வு முடிந்த பின்னர் மாலையில், 26, அலிப்பூர் சாலையிலிருந்த இல்லம் சென்று டாக்டர் அம்பேத்கர் அவர்களைச் சந்தித்து, ஜெய்பீம் பத்திரிகை குறித்தும், செட்யூல்டு காஸ்ட் பெடரேசன் குறித்தும் பேசி நல்வாழ்த்துகள் பெற்று சென்னை திரும்பினார்.

1956 பிப்ரவரியில் ‘புத்தரும் அவர் தம்மமும்’, ‘பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்’, ‘புத்தரும் மார்க்சும்’ ஆகிய நூல்களை டாக்டர் அம்பேத்கர் எழுதி முடித்தார். 1.5.1956ல் மாநிலங்கள் அவையில் மொழிவழி மாநிலங்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசினார். 23.9.1956ல் தான் பௌத்த மதத்திற்கு மதம் மாறுவது குறித்து டாக்டர் அம்பேத்கர் ஓர் அறிக்கையை வெளியிட்டார். 14.10.1956ல் காலை 9.30 மணியளவில் மகாஸ்தவுர் சந்தராமணி திரிசரணம் - பஞ்சசீலம் கூற பாபாசாகேப் அம்பேத்கரும், அவர் மனைவி சவீதா கபீரும் பவுத்தம் தழுவினர். பாபாசாகேப் அம்பேத்கர் 22 உறுதிமொழிகளைப் படிக்க அதைத் திரும்பக் கூறிய ஆறேழு இலட்சக்கணக்கான மக்கள் அம்பேத்கருடன் பவுத்த மார்க்கம் தழுவினர். 15.11.1956ல் டாக்டர் அம்பேத்கர் உலக பவுத்த மாநாட்டில் அதன் பிரதிநிதியாகக் கலந்துகொள்ள காட்மாண்டு சென்றார். அங்கு ‘புத்தரும் கார்ல்-மார்க்ஸ்சும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். 4.12.1956ம் நாள் மாநிலங்கள் அவையில் டாக்டர் அம்பேத்கர் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். மாநிலங்கள் அவையின் வராந்தாவில் அமர்ந்து சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். இதுவே அவரின் கடைசி வருகை. 5.12.1956 இரவு 8.00 மணியளவில் சமணத் தலைவர்கள் டாக்டர் அம்பேத்கரை சந்தித்தனர். ‘ஜைனமும் பவுத்தமும்’ என்னும் நூலை அன்பளிப்பாக வழங்கி உரையாடிச் சென்றனர். டாக்டர் சவீதா கபீர் தன் உறவினர் டாக்டர் மௌலங்கருடன் 1.30 மணியளவில் கடைவீதிக்குச் சென்றவர் மாலையில் தான் இல்லம் திரும்பினார். அம்பேத்கர் சவீதாவைக் கடிந்துப் பேசினார். மௌலங்கர் கடைசி விருந்தினராக இரவு வீட்டிலிருந்து வெளியேறினார். ராட்டு இரவு 12 மணியளவில் தன் இல்லம் சென்றார். பாபாசாகேப் இரவு உணவு உண்ட பின்னர் சில நூல்களைத் தேர்வு செய்து இரவு படிப்பதற்காக எடுத்துக்கொண்டு புத்தக அலமாரிகளை ஒருமுறை கூர்ந்து பார்த்துவிட்டு படுக்கை அறைக்குச் சென்றார். இரவு படுக்கையிலேயே டாக்டர் அம்பேத்கர் உயிர் பிரிந்தது.

டெல்லியில் அலிப்பூர் சாலை இல்லத்தில் தேசத் தலைவர்கள் எல்லாம் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். கடல்போல் திரண்ட மக்கள் கூட்டம் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. இரவு 9.30 மணியளவில் தனி விமானத்தில் அவர் உடல் ஏற்றப்பட்டு பம்பாய் சாந்தாகுருஸ் விமானநிலையத்துக்கு 3.30 மணியளவில் வந்து சேர்ந்தது. கொட்டும் பனியிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அழுதுபுரண்டது; இராஜகிருகாவில் அவருடல் பார்வைக்கு வைக்கப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் இறந்தோர் பலர். இரவு 7.30 மணியளவில் தாதர் இடுகாட்டில் பவுத்த முறைபடி அவருடல் எரியூட்டப்பட்டது.

பெரியார் ஈ.வெ.ரா. பெரிய இடத்துப் பிள்ளை. மேட்டுக்குடியில் பிறந்தவர்; பணக்காரரும்கூட. பள்ளியில் படிப்பதற்குத் தடையில்லை. ஆனாலும் படிக்கவில்லை. 5ஆம் வகுப்போடு சரி. 12 வயதிலேயே வியாபாரம் செய்தார். 19 வயதில் திருமணம். ஆனாலும் நண்பர்களோடு தாசி வீடுகளில் தஞ்சம். 25 வயதில் துறவு மேற்கொள்கிறார். புத்தரைப்போல் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசையை வெறுத்தல்ல. வீட்டாருடன் வெறுப்பு. கண்காணாத இடத்துக்குச் சென்றுவிடக் கருதி காசிக்குச் செல்கிறார். பக்தி மேலீட்டால் அல்ல. பார்ப்பனர்கள் மீது ஏற்பட்ட வெறுப்பு. எச்சில் இலையையும் வழித்து உண்கிறார். துறவு கோலம் பூண்டாலும் அவரைத் துரத்துகிறார்கள் பூநூல் இல்லை என்பதால். ஈரோடு திரும்புகிறார் தந்தையோடு. வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கிறார். பல உயர் பதவிகளை வகிக்கிறார். பக்திக் குடும்பத்தில் பிறந்த அவர் தேவஸ்தான போர்டு தலைவர் ஆகிறார். பக்தியில் மூழ்காமல் பல சீர்திருத்தங்களைச் செய்கிறார். பொது நிலையங்களில் வகித்து வந்த 29 பதவிகளையும் இராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் சேர்கிறார். காந்தியாரின் சீடராகிறார். 80 வயது தாயார், மனைவி மற்றும் உள்ளவர்களை கதர் உடுத்தச்செய்கிறார். கதரை தோளில் சுமந்து தெருத் தெருவாக விற்கிறார். காந்தி ‘மது தரும் மரங்களை வெட்டவேண்டும்’ என்று கூறியதும் சேலம் தாதம்பட்டியிலிருந்த தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.

1924ல் மலையாளத்தில் வைக்கம் ஊரில் தீண்டாமைக்காக, மறியல் செய்து சிறை புகுந்தார். சேரன் மாதேவி குருகுல ஆசிரமத்தில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் பிரிவினை செய்ததை கண்டித்து தமிழ்நாடு காங்கிரசு தலைவர் பதவியை உதறினார். ‘இனி காங்கிரசை ஒழிப்பதே என் வேலை’ என வெளியேறினார். 1927ல் வருணாச்சிரமம் ஒழிந்தால்தான் தீண்டாமை ஒழியுமென்று காந்தியாரிடம் வாதிட்டார். 1929ல் செங்கற்பட்டில் முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டைக் கூட்டினார். கலப்புத் திருமணம், விதவைத் திருமணம், புரோகிதமற்றத் திருமணங்களை நடத்தினார். பார்ப்பனர்களை முழுமூச்சாக எதிர்த்தார். இராமாயணம், மகாபாரதம், மனுஸ்மிருதியை எரித்தார். "பார்ப்பனர்களின் பூநூலை வெட்டு, குடுமியை வெட்டு, பாம்பை விட்டுவிடு, பார்ப்பானை அடி" என்று முழங்கினார். ஆச்சார பார்ப்பனர்கள் அடங்கி ஒடுங்கினர். சி.இராஜகோபாலாச்சாரி போன்ற பார்ப்பனர்கள் பெரியாரின் நண்பர்களாக இருந்தனர். சூத்திரர்கள் என அடிமைப் படுத்தப்பட்ட நான்காம் வருணத்தாரை மீட்டெடுக்கப் போராடினார்.

முரட்டுப் பிடிவாதக்காரர் தந்தை பெரியார். ஆனால் அனைவருடனும் குழந்தைப்போல் பழகிடும் பண்பாளர். அவருடைய முரட்டுப் போராட்டங்கள் தான் மூடப் பழக்கவழக்கங்களை அடக்கி ஒடுக்கியது. ஆசார அனுஷ்டானங் களை அடக்கி வாசிக்கவைத்தது. காங்கிரசை முழுமூச்சாய் எதிர்த்த அவர் காமராசரை ஆதரித்தார். ஒரு பச்சைத்தமிழன் முதல்வராக வேண்டும், ஒரு யோக்கியன் அரசாள வேண்டும் என்பதற்காக. மணியம்மை திருமணத்தின் போது பிரிந்துச்சென்ற அண்ணா முதல்வராக திருச்சிக்கு வாழ்த்து பெற வந்தபோது கண்கலங்கி வாழ்த்திய தந்தை, அண்ணா மறைந்தபோது குழந்தைபோல் அழுதார். தந்தை பெரியார் தன் சிலை திறப்பு விழாக்களில் தானே பங்கேற்று கட்சிக்குப் பணம் சேர்த்தார். தன்னலத்துக்காக அல்ல. கருப்புச் சட்டைப் படை காலமெல்லாம் கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்புக் களப்போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட. கருப்புச் சட்டையை முதல் ஆளாகப் போட்டவர்களெல்லாம் மஞ்சள் துண்டுக்கு மாறிவிட்டார்கள். கருப்புச் சட்டைக்கு உரியவர்கள் களப்போராட்டத்துக்கு பதில் அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் வழி வந்தோரெல்லாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் அவர்களின் ஊடகங்கள் எல்லாம் பார்ப்பன- புராண - ராமாயண - மகாபாரத பக்தியைப் பரப்பிக்கொண்டிருக்கிறது. பெரியார் பெயரில் தொலைக்காட்சி தொடங்கி அவருடைய பேச்சுகளையும், களப்போராட்டங் களையும் அன்றாடம் ஒளிபரப்பினாலே தமிழக மக்கள் பக்தியை மறந்து பகுத்தறிவில் திளைப்பார்கள்.

தந்தை பெரியார், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 6.12.1956ல் மறைவுற்றபோது விடுதலையில் எழுதினார்: "மூவாயிரம் ஆண்டுகளில் இந்த உலகில் நான்கு உத்தமச் சீலர்கள் தோன்றினார்கள், அவர்கள் புத்தர், ஏசு, நபிகள், டாக்டர் அம்பேத்கர் எனக் கூறிவிட்டு, பாவிகள் அவரைக் கொன்றுவிட்டார்கள்" என்று எழுதியிருந்தார். சூத்திரர்கள் என இகழப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்கள் வாழ்வுயர அவர் அரும்பாடுபட்டார். ஆனால் பெரியார் எதிர்பார்த்த கடவுள் மறுப்பு, சாதியொழிப்பில் பிற்படுத்தப்பட்டவர்கள் மனம் ஒன்றவில்லை. சாதி வெறியிலும், பக்தி மோகத்திலும் பார்ப்பனர்களைவிட அதிகமாக சாதி ஏற்றத்தாழ்வில் மூழ்கி அரசியலிலும், சமுதாயத்திலும் சதிசெய்து பெரியார் கூறிய சமத்துவ சகோதரத்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்கிறார்கள்.

** டாக்டர் அம்பேத்கர் தீண்டப்படாத மகார் குடும்பத்தில் பிறக்கிறார். ஏழ்மையில் உழலும் இராணுவ வீரனின் 14வது மகனாகப் பிறக்கிறார். தீண்டாமைக் காரணமாக வகுப்பின் உள்ளே அமர்ந்துப் படிக்க அனுமதியின்றி வாசலில் அமர்ந்துப் படிக்கிறார். அப்போதே அவர் உள்ளத்திலோர் இலட்சியம் துளிர்விடுகிறது. ‘மறுக்கப்படும் கல்வியில் உயர்ந்து இந்த இழிநிலையை ஒழித்திட வேண்டுமென்று’. வீட்டில் படிக்க இடவசதியின்றி, தெரு விளக்குக் கம்பத்தின் கீழும், பூங்காக்களிலும் அமர்ந்துப் படிக்கிறார். ஆசிரியர் கெலூஸ்கர் அன்பைப் பெறுகிறார். மகார் இனத்தில் முதல் மாணவராக மெட்ரிகுலேசன் தேர்வில் வெற்றிப் பெறுகிறார். பாராட்டு விழாவில் புத்தர் நூலை பரிசாகப் பெறுகிறார். 16 வயதில் பாய்குலா மீன் மார்க்கெட்டில் நள்ளிரவில் இராமாபாயை மணக்கிறார். கபீர் பக்தர் குடும்பமானதால் சைவமாகவே வாழ்கிறார். கெலூஸ்கர் உதவியோடு பரோடா மன்னரின் பணஉதவி பெற்று கல்லூரியில் படித்து பி.ஏ. தேர்வு பெறுகிறார். உயர் கல்வி பெற மன்னனிடம் உதவி தொகைப் பெற்று அமெரிக்கா செல்கிறார். அரைப் பட்டினி முழுப்பட்டினி கிடந்தும், அல்லும் பகலும் அயராது படிக்கிறார். கல்லூரி நூலகங்களிலும் பொது நூலகங்களிலும் படித்து அறிவை விரிவாக்கிக் கொள்கிறார். எம்.ஏ. தேர்வில் வெற்றி பெறுகிறார். பார் அட் லா படிக்க இலண்டன் சென்று படிப்பைத் தொடர்கிறார். ‘கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான்’ என்பதற்கேற்ப பரோடா மன்னர் படிக்க பணவுதவி செய்தாலும், பார்ப்பன திவானும் மற்றவர்களும் அம்பேத்கரை ஒப்பந்தப்படி இந்தியா திருப்ப வலியுறுத்தி, பரோடாவில் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கித் துன்புறுத்துகின்றனர்.

வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சியதுப் போலிருந்தாலும், டாக்டர் அம்பேத்கர் உள்ளத்தில் எரியும் தீயில் எண்ணெய் வார்த்ததுப் போலானது இச்செயல்கள். தீண்டாமைக் கொடுமைக்குச் சாவு மணியடிக்கத் திமிறி எழுந்தார். ‘மூக் நாயக்’ (ஊமைகளின் தலைவன்) என்ற வார இதழைத் தொடங்கினார். பம்பாய் சைடன்ஹாம் கல்லூரியில் பொருளாதாரத் துறை பேராசிரியராகப் பணியாற்றினார். பார்-அட்-லா கல்வியைத் தொடர இலண்டன் பயணமானார். பார்-அட்-லா பட்டத்தோடு, டாக்டர்-ஆப்-சைன்ஸ் என்ற உயர் ஆய்வுப் பட்டத்தோடு இந்தியா திரும்பினார். பகிஷ்கரித் ஹித்தகாரணி சபாவை ஏற்படுத்தினார். மகாத் நகரில் தீண்டப்படாதார் உரிமையை நிலைநிறுத்த மாநாடுகள் நடத்தினார். மனுஸ்மிருதியை எரித்தார். சவுதார் குளத்தில் இறங்கி நீரெடுத்துக் குடித்து உரிமையை நிலைநிறுத்தினார். சாதி இந்துக்களின் தாக்குதலை வழக்கு மூலம் முறியடித்தார். ‘பகிஷ்கரித் பாரத்’ என்ற மாதமிருமுறை இதழைத் தொடங்கினார்.

தீண்டப்படாத வகுப்பு மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அச்சிடப்பட்ட அறிக்கையை சைமன் குழுவிடம் கொடுத்தார். பம்பாய் சட்டக் கல்லூரியில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ‘சமதா’ என்னும் பெயரில் மாத இதழ் தொடங்கினார். இலண்டனில் நடைபெற்ற மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் பாபாசாகேப் அம்பேத்கர் பங்கேற்று தீண்டப்படாத மக்களின் உரிமைகளுக்காகப் போராடினார், வாதாடினார், வெற்றி பெற்றார். தீண்டப்படாத மக்களின் ஈராயிரமாண்டுக் கொடுமைகளை உலகறியச் செய்தார். பிரிட்டீஷ் அரசும் அவர்களின் துயரைத் துடைக்க வில்லை எனக் குற்றம் சாட்டினார். பிரிட்டீஷ் அரசு அவர்களுக்கு அரசியல் வாக்குரிமைகளை வழங்கியது. இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் மட்டும் பங்கேற்ற காந்தியார் தீண்டப்படாத மக்களின் வாழ்வுரிமைக்குத் தடைப் போட்டார். இந்து மத வர்ணாஸ்ரமத்துக்கு புறம்பாக இந்து மத சமய மரபுகளுக்கு முரணாக பிரிட்டீஷ் அரசு செயல்படுவதாகக் கூறி, தீண்டப்படாத மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குரிமையை எதிர்த்து எரவாடா சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். காந்தியாரின் உயிரைக் காப்பாற்ற வேண்டி தேசத் தலைவர்கள், கஸ்தூரிபாயும் பாபாசாகேப் அம்பேத்கரை வேண்டினர்.

புத்தரைப் போற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் மனிதநேயத்தோடு காந்தியின் உயிரைக் காப்பாற்றவும், தீண்டப்படாத மக்களின் உயிரையும், உடமை களையும், உரிமைகளையும் நிலைநிறுத்தவும் சில உயரிய உரிமைகளை விட்டுக்கொடுத்து ‘பூனா ஒப்பந்தத்தில்’ கையொப்பமிட்டு நாட்டில் அமைதி நிலவச் செய்தார். பிரிட்டீஷ் வைஸ்ராய் மந்திரி சபையில் தொழிலாளர் அமைச்சராக நியமிக்கப்பட்டார். நான்கு ஆண்டுகளில், தொழிலாளர்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்கி சாதனை படைத்தார். விடுதலைப் பெற்ற சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் மந்திரி சபையில் காங்கிரஸ் அல்லாத பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் சட்ட அமைச்சரானார். இந்திய அரசமைப்புச் சட்டத்தை தனியொருவராக 18 மாதங்களில் எழுதி முடித்தார். தான் எண்ணியபடி இந்து இந்தியாவில் பொதுவான ஒரு சட்டத்தை முழுமையாக இயற்ற முடியாவிட்டாலும், ஈராயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு தீண்டப்படாதவர்களாக ஒதுக்கப்பட்ட மக்களின் - செட்யூல்டு இன மக்களின் உரிமைகளை சட்டத்தில் பணிவுசெய்து தீண்டாமைக் கொடுமைகளுக்கு சாவுமணி அடித்தார். எஸ்.சி./எஸ்.டி./பி.சி மக்களின் வாக்குரிமை வாழ்வுரிமைக்கு வழிவகுத்தார்.

சட்டக்குழுவில் உறுப்பினராக இருந்த மற்ற மதத்தவர்கள் அவரவர் மதவுரிமை களைப் பாதுகாக்க விரும்பினார்களேயொழிய இந்திய மக்களுக்கென ஒரு பொதுவானச் சட்டம் உருவாக்கிட ஒப்பவில்லை. தனியொருவராகச் சட்டத்தை எழுதி முடித்த டாக்டர் அம்பேத்கர் கடுமையான நோயால் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். அம்மருத்துவமனையில் டாக்டர் அம்பேத்கருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சவீதா கபீர் வாழ்நாளெல் லாம் அம்பேத்கருடனிருந்து அவரைப் பாதுகாப்பதாக உறுதியளித்தார். டாக்டர் அம்பேத்கர் தன் முதல் மனைவி இராமாபாய் மறைந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு சவீதா கபீரை பதிவுத் திருமணம் செய்துகொண்டார். இதன்மூலம், தன்னைப் பெரிதும் துன்புறுத்திய இந்து மத வெறியர்களைப் பார்த்து "இந்து மதத்தின் மிக உயர்ந்த குலம் எனப்படும் பார்ப்பனர்களின் மருமகனாவேன்" என முன்னர் தான் மேற்கொண்ட அறைகூவலை நிவர்த்திச்செய்தார்.

பிரதமர் நேருவின் உறுதிமொழியை ஏற்று சட்டத்தை எழுதி முடித்த பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், இந்துச் சட்டத்தால் இந்தியப் பெண்கள் படும் துன்பங்களைக் களைந்திட ‘இந்து சட்டத் திருத்த மசோதாவை’ நாடாளு மன்றத்தில் சமர்ப்பித்தார். இந்து மத வெறியர்களான இராஜேந்திரபிரசாத், வல்லபாய் பட்டேல், ராஜாகோபாலச்சாரி போன்றவர்களால் அம்மசோதா நிறைவேறவில்லை. நேரு பதவியை பாதுகாத்துக்கொள்ள மௌனம் சாதித்தார். இந்திய நாட்டுப் பெண்களின் நலனுக்காக பாபாசாகேப் அம்பேத்கர் தன் சட்ட அமைச்சர் பதவியை உதறித் தள்ளினார். இந்து மதத்தை சீர்திருத்தவே முடியாது என முடிவுக்கு வந்த அவர் இந்து மதத்தை விட்டு விலகி 14.10.1956 அன்று பவுத்த மார்க்கத்தைத் தழுவினார் தன் தொண்டர்கள் ஆறேழு இலட்சம் மக்களோடு நாக்பூரில். அப்போது 22 உறுதிமொழிகளை பவுத்தம் ஏற்றோரை ஏற்கச் செய்தார். இதன் மூலம் "இந்துவாகப் பிறந்துவிட்ட நான் இந்துவாக இறக்க மாட்டேன்" என இருபதாண்டுகளுக்கு முன் அவர் ஏற்ற அறைகூவலை சாதித்தார்.

டிசம்பர் 6, 1956ல் அவர் மறைவுற்றபோது தந்தை பெரியார் விடுதலையில் எழுதினார்: "இந்த உலகில் மூவாயிரம் ஆண்டுகளில் நான்கு உத்தமர்ச் சீலர்கள் தோன்றினார்கள். அவர்கள், புத்தர், ஏசு, நபிகள், டாக்டர் அம்பேத்கர். பாவிகள் அவரைக் கொன்றுவிட்டார்கள்"" என்று. புத்தர் ஒழுக்க விதிநூலை உலகுக்கு தந்தார்.  ஏசு விவிலியத்தைத் தந்தார். நபிகள் குர்-ஆனை தந்தார். டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் மற்றும் பல நூல்களையும் தந்தார். மற்ற மூவரும் ஒடுக்கப்பட்ட மக்களை வாழவைக்க அறிவுரை கூறினார்களேயொழிய - ஆணித்தரமாக இதை இதைச் செய்யவேண்டும் என்று சட்டமாக்கவில்லை. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் மட்டுமே சட்டமியற்றி மக்களை முறைசெய்து காப்பாற்றிய இறைவனாகத் திகழ்கிறார்.

சட்டத்தை எழுதி முடித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த வேளையில் ஓர் எச்சரிக்கையை அவையில் அறிவித்தார். "26 ஜனவரி 1950ல் நாம் ஒரு முரண்பாடான வாழ்க்கையை மேற்கொள்ளவிருக்கிறோம். அரசியலில் நாம் சமத்துவத்தையும், சமூக பொருளாதார வாழ்வில் சமத்துவமற்ற ஒரு நிலையையும் மேற்கொள்ளவிருக்கிறோம். அரசியலில் ஒரு மனிதன் - ஒரு வாக்கு - ஒரு மதிப்பு என்ற நிலையை ஏற்றுக்கொள்வோம். சமூக பொருளாதார வாழ்வில் ஒரு மனிதன் - ஒரு மதிப்பு என்ற நிலையைத் தொடர்ந்து மறுத்துக் கொண்டிருப்போம். இந்த முரண்பாட்டை வெகு விரைவில் நாம் மாற்றியாக வேண்டும். இல்லையேல் சமூக பொருளாதார வாழ்வில் துன்புறுவோர் பொங்கி எழுந்து, இந்தப் பாராளுமன்றம் இவ்வளவு அரும்பாடுபட்டு உருவாக்கிய ஜனநாயக அமைப்பையே உடைத்தெறிந்து விடுவார்கள்" என்று எச்சரித்தார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் களுக்கும், முதலாளிகளுக்கும் சம்பளம் உயர்ந்துகொண்டே போகிறது. சாமானிய மக்கள் சாதி மத வெறியால் சமநிலையற்றும் பொருளாதாரத்தில் பின்நிலையுற்றும் குமுறிக் கிடக்கின்றனர். இதன் வெளிப்பாடே நக்சலைட்டு களின் தாக்குதல்கள். கோயில்களில் குவிந்து கிடக்கும் தங்கங்களை கொள்ளையடிக்கும் கூட்டங்கள்.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் தன் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையை முன்வைத்தார். நான் என் விலா எலும்புகள் ஒடிய மிக அரும்பாடுபட்டு இந்தத் தேரை (ஒதுக்கீடு உரிமையை) தனியொருவனாகக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளேன். என் தளபதிகளே முடிந்தால் நீங்கள் ஒன்றுசேர்ந்து இந்தத் தேரை (ஒதுக்கீடு உரிமையை) முன்னோக்கி இழுத்துச் செல்லுங்கள் (எண்ணிக்கையில் உயர்த்துங்கள்) முடியாவிட்டால் இருக்கும் இடத்தில் நிலையாக இருந்திடச் செய்யுங்கள். பின்னோக்கிச் செல்ல மட்டும் அனுமதித்து விடாதீர்கள் (குறையவோ நீக்கவோ விட்டுவிடாதீர்கள்) எனக் கூறினார். அண்ணல் அம்பேத்கரின் தொண்டர்கள் (போர் வீரர்கள்) போராடும் அளவுக்குக் கூட அவரால், தளபதிகள் என்று அழைக்கப்பட்ட, அவர் பெற்றுத்தந்த ஒதுக்கீட்டு உரிமைகளால் படித்துப் பட்டம் பெற்று, அதிகாரிகளாய் உள்ளோர், அவர் போட்ட ஒதுக்கீட்டுப் பிச்சையில் தனித் தொகுதிகளில் நின்று வென்று ஆயிரக்கணக்கில் உள்ள SC/ST சட்டமன்ற உறுப்பினர்கள், நூற்றுக்கணக்கில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அம்பேத்கர் விரும்பியபடி தேரினை (ஒதுக்கீட்டு உரிமைகளை) முன்னோக்கி இழுக்காமல், பின்னோக்கிச் செல்ல ஒற்றுமையின்றி கட்சி அடிமைகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரிகள் சாதியை மறைத்துக்கொண்டு சமுதாய மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்.

என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

என்னும் நமது முப்பாட்டன் திரிக்குறளையும்,

நீதி தவறும் ஆட்சியாளர்கட்கு...

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றோ
செல்வத்தைத் தேய்க்கும் படை

என்னும் குறளையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

(சுருக்கமாகத் தொகுக்கப்பட்ட பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் வரலாற்றுக் குறிப்புகள் தொடர்ந்து விரிவாகப் பதிவு செய்யப்படும்)

No comments:

Post a Comment